42. எம்பெருமானாரின் கீதா பாஷ்யம் December 1, 2007
Posted by sridharan in ஸ்ரீமத் பகவத் கீதை ப.Tags: , arjuna, bashyam, goal, karma, krishna, mosha, mosham, ramanuja
trackback
(ச்லோகம் 2-41 பாஷ்யம் தொடர்கிறது)
ஒரே தீர்மானத்துடன் உள்ள இந்த புத்திக்கு ஒரே குறிக்கோள் மட்டுமே உள்ளது (மோக்ஷம் பெறுவது) - காரணம் அந்த ஒரு பலனைப் பெறுவதில் மட்டுமே உறுதியாக உள்ளது. மோக்ஷம் என்பதை மட்டுமே எண்ணியுள்ளவர்களுக்கு, அவர்கள் செய்யும் செயல் அனைத்தும் அதனைப் பெறுவதற்கு மட்டுமே ஆகும். ஆகவே அடையும் குறிக்கோள் ஒன்றாக உள்ளதால், மோக்ஷம் பெற விருப்பும் ஒருவனின் புத்தியும் ஒன்றாகவே இருக்கும். ஒரு கேள்வி - பல கர்மங்கள் எவ்வாறு ஒரே சாஸ்திரமாக இயலும்? இதனை ஓர் உதாரணம் மூலம் காண்போம் - ஆக்நேயம் என்று தொடங்கி ஆறுவகையான யாகங்கள் உள்ளன(ஆக்நேயம், அக்நீஷோமீயம், உபாம்சு, ஐந்த்ர யாகம் இரண்டு , ஜத்ராக்ந யாகம்). இவை அனைத்தும் இணைந்து ஒரு பலனைப் பெறவே இயற்றப்படுகின்றன. ஆகவே இவை ஆறில் செலுத்தப்படும் புத்தி ஒன்று அல்லவோ? நாம் மேலே எழுப்பிய கேள்வியும் இது போன்றே ஆகும்.
ஆனால் காம்யகர்ம புத்திக்கு இந்த விதமான சிறப்பு இல்லை (பலனை எதிர்பாராமல் செய்வது கர்மயோகம் அல்லது நிஷ்காம்ய புத்தி எனப்படும்; பலனை எதிர்பார்த்துச் செய்வது காம்யகர்ம புத்தி எனப்படும்). இப்படிப்பட்டவர்கள் கர்மங்களை இயற்றுவது ஏன் என்றால் - ஸ்வர்க்கம், புத்ரர்கள், பசு, உணவு போன்றவற்றைப் பெறவே ஆகும். எனவே அவர்களுடைய புத்தியும் பலவாக உள்ளன. ஸ்வர்க்கம் பெறுவது மட்டுமே குறிக்கோளாக உள்ள தர்சபூர்ணமாஸம் என்னும் கர்மம், ஒரே பலனை மட்டுமே கொண்டிருந்தாலும், அதன் கிளைப்பலன்களாக - இதனை இயற்றுபவனுக்கு நல்ல ஆயுள் உண்டு - போன்றவையும் கூறப்படுகின்றன. ஆக காம்யகர்ம புத்தி உள்ளவர்கள் செய்யும் கர்மங்களில் பல பிரிவுகளும் உள்ளன; அவை கணக்கற்றும் உள்ளன.
ஆக இங்கு உள்ள முடிவுகள் என்ன? நாம் அன்றாடம் செய்யும் செயல்களோ அல்லது குறிப்பிட்ட நாட்களில் செய்யும் செயல்களோ நமக்குப் பலன் அளிக்கக்கூடும். ஆனால் நாம் அந்தப் பலன்களை ஒதுக்கிவிட வேண்டும்; மோக்ஷம் மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளவேண்டும். இப்படிப்பட்ட கர்மங்களை நாம் இயற்றும் போது சுயநலம் ஏதும் இல்லாமல் இயற்றுதல் வேண்டும். பலனை எதிர்பார்த்துச் செய்யும் செயல்களும் அவரவர்களால் எந்த அளவு இயற்ற இயலுமோ அந்த எல்லை வரையே செய்தால் போதுமானது. அப்படிப்பட்ட செயல்களும் பலனை ஒதுக்கும்போது மோக்ஷ பலனை அளிக்கக்கூடியவை என்பதை உணரவேண்டும். இப்படிப்பட்ட கர்மங்கள் (பலனை எதிர்பார்த்து இயற்றப்படும் கர்மங்கள்) நாம் அன்றாடம் செய்யவேண்டிய கர்மங்களுக்கு இணையாகவே கருதப்பட வேண்டும் . மேலும் அவை அந்தந்த இடத்திற்குத் தகுந்தபடியோ, வர்ணாச்ரமத்திற்குத் தகுந்தபடியோ இருக்கலாம்.
Comments»
No comments yet — be the first.