25. இராமானுச நூற்றந்தாதி(பாசுரங்கள் 49-50) February 22, 2008
Posted by sridharan in இராமானுச100அந்தாதி.add a comment
விளக்கவுரை – அழகிய தாமரை மலர்களில் உள்ள தேன் என்னும் ஆறானது எங்கும் பாய்ந்தபடி நிற்கும் வயல்களால் சூழப்பட்டது திருவரங்கம் ஆகும். இந்தத் திருவரங்கத்தில் கண்வளர்ந்தபடி உள்ள பெரியபெருமாளான அழகியமணவாளனின் திருவடிகளை, தாம் பெற்ற உயர்ந்த செல்வம் இதுவே என்று தனது தலையில் வைத்து, அவற்றில் ஈடுபட்டபடி உள்ளவர் எம்பெருமானார் ஆவார். வேதவேதாந்த தர்மங்கள் அனைத்திற்கும் பாதகம் வரும்படியாக ஏற்பட்ட பௌத்தம் முதலான ஆறு மதங்களாலும், கலியுகத்தால் பீடிக்கப்பட்ட நிலையில் உள்ளதாலும் துவண்டிருந்த இந்தப் பூமியில் எம்பெருமானார் அவதரித்தார். இதனால் நிகழ்ந்தது என்ன? மறைந்து விட்டிருந்த வேதவேதாந்த மார்க்கங்கள் மீண்டும் தழைத்தன. பொய்யான கருத்துக்களைப் பரப்பிய ஆறு (பௌத்தம், சார்வாகம், சாக்கியம், உலூக்கியம், பாசுபதம் மற்றும் காணாபத்யம்) மதங்களும் நிலை குலைந்தன. நமக்கு அஜ்ஞானம் உண்டாக்கிக் கொண்டிருந்த கலியானது அழிந்தது.
50. உதிப்பன உத்தமர் சிந்தையுள் * ஒன்னலர் நெஞ்சம் அஞ்சிக் கொதித்திட மாறி நடப்பன * கொள்ளைவன் குற்றம் எல்லாம் பதித்த என் புன்கவிப் பாவினம் பூண்டன பாவு தொல்சீர் எதித்தலை நாதன் * இராமானுசன் தன் இணை அடியே.விளக்கவுரை – அனைத்து திசைகளிலும் பரவி உள்ளதாக, முயற்சி செய்து அடையப் பெறாமல் தானாகவே இயற்கையாக அமைந்துள்ள உயர்ந்த திருக்கல்யாண குணங்கள் கொண்டவர் எம்பெருமானார் ஆவார். அருளாளப் பெருமாள் எம்பெருமானார், எம்பார் தொடங்கி எழுநூறு ஜீயர்களின் தலைவராக உள்ளவர் எம்பெருமானார் ஆவார். இவரது திருவடிகள் மிகவும் உயர்ந்தவை ஆகும். எப்படி என்றால் – இந்த ஸம்ஸார உலகில் உள்ள மக்களுடன் ஒன்றாக வாழ்ந்து, அவர்களைக் கரை ஏற்றியபடி உள்ளது; பரதன் போன்ற உயர்ந்தவர்களின் சொற்களை நிராகரித்து எம்பெருமானின் திருவடிகள் கானகம் சென்றன, ஆனால் எம்பெருமானாரின் திருவடிகள் அப்படி அல்லவே! ஆக இவரது திருவடிகளுக்கு ஒப்பான திருவடிகளைக் கொண்டவர்கள் வேறு யாரும் இல்லை என்றானது. மிகவும் உயர்ந்தவர்களின் நெஞ்சங்களில் இந்தத் திருவடிகள் எப்போதும் நீங்காமல் உள்ளன. வேதவேதாந்தங்களைக் குறித்து எதிர்வாதம் செய்பவர்கள் அச்சம் கொள்ளும்விதமாக இவரது திருவடிகள் கம்பீரமாக நடக்கின்றன. அனைத்து வகையான குற்றங்கள் உள்ள என் போன்ற நீசனின் மூலம் வெளிப்பட்டதும், கவிதை கூறும் திறன் அற்ற என் போன்றவன் மூலம் வெளிப்பட்டதும் ஆகிய இந்தப் பாசுரங்களை – “இவை குற்றம் நிறைந்த பாசுரங்கள்”, என்று ஒதுக்காமல், மாலையாக எண்ணி, தன் மீது எம்பெருமானாரின் திருவடிகள் சூடிக்கொண்டன.
24 இராமானுச நூற்றந்தாதி(பாசுரங்கள் 47-48) February 21, 2008
Posted by sridharan in இராமானுச100அந்தாதி.add a comment
விளக்கவுரை – இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் சரணம் புக ஏற்றவனாகவும், அனைத்து ஆத்மாக்களின் தலைவனாகவும், அனைத்திற்கும் ஸ்வாமியாக உள்ளவனும் யார் என்றால், திருவரங்கத்தில் கண்வளரும் பெரியபெருமாள் என்ற திருவரங்கச்செல்வனே ஆவான் – என்று, இப்படியாக இருள்தருமா ஞாலத்தில் உள்ள மக்களுக்கு உயர்ந்த உபாயத்தை எம்பெருமானார் அருளிச் செய்தார். இப்படிப்பட்ட உயர்ந்த தர்மத்தை இந்த உலக மக்களின் சுக-துக்கம் ஆகியவற்றைத் தன்னுடையதாகவே கொள்ளும் உறவினன் போன்ற எம்பெருமானார் உபதேசித்தார். இவர் எனக்குச் செய்த உதவி என்ன என்றால் – எத்தனை அனுபவித்தாலும், எத்தனை ப்ராயச்சித்தம் செய்தாலும் கழியாமல் எனது வினைப்பயன்கள் இருந்தன; அவற்றை அழித்தார்; அவை மீண்டும் என்னை அண்டிவிடாமல் தடுக்க, இரவு-பகல் பாராமல் இடைவிடாமல் எனது இதயத்தில் நிலையாக வீற்றிருந்தார். இத்தகைய இவரது வாத்ஸல்ய குணத்திற்கு ஈடில்லாமல் இருந்தார். இவ்விதம் எம்பெருமானாரை அடைந்துவிட்ட எனக்கு, இந்த உலகில் நிகரானவர்கள் யாரும் இல்லை.
48. நிகரின்றி நின்ற என் நீசதைக்கு * நின் அருளின் கணன்றிப் புகல் ஒன்றும் இல்லை அருட்கும் அஃதே புகல் * புன்மையிலோர் பகரும் பெருமை இராமானுச இனி நாம் பழுதே அகலும் பொருளேன் * பயன் இருவோமுக்கும் ஆன பின்னே.விளக்கவுரை – ஆத்மகுணங்கள் (மிகவும் உயர்ந்த குணங்கள் எனலாம்) உள்ளவர்கள், அனாத்ம குணங்கள் (தாழ்ந்த குணங்கள் எனலாம்) உள்ளவர்கள் என்று இந்த உலகில் உள்ளவர்களைத் தனித்தனியே பிரித்து ஆராய்ந்தால், என்னைப் போன்று ஆத்மகுணங்கள் முற்றிலும் அற்றவன், அனாத்ம குணங்கள் பரிபூர்ணமாக உள்ளவன் வேறு யாரும் இருக்கமுடியாது. இப்படிப்பட்ட தாழ்ந்தவனான எனக்கு உமது கருணை அல்லாமல் வேறு புகலிடம் இல்லை. சேஷபூதன் (அடிமை) ஒருவனின் குற்றங்கள் அனைத்திலும் சேஷியின் (எஜமானன்) குணங்கள் புகும் தன்மை போன்று, எம்பெருமானாரின் திருக்கல்யாண குணங்கள் உள்ளன. இவரது குணங்கள் அனைத்தும் எனது தோஷங்களில் புகலிடம் தேடி வந்தன – காரணம், தோஷம் அற்றவர்களுக்கு இவரது குணங்கள் பயன்படாது; அவை என் போன்று பலவிதமான குற்றங்கள் செய்பவர்களுக்கு மட்டுமே, அவர்களைத் திருத்துவதற்காகக் பயன்படும். ஆக இவரது குணங்களுக்கு எனது தோஷங்கள் புகலிடமாக இருந்தன. இப்படியாக் எம்பெருமானாரின் குனங்கள் வந்து தங்கும் பாத்திரமாக நான் அவருக்குப் பெரும் பேறாக அமைந்துவிட்டேன். ஸம்ஸாரம் என்ற பிடியில் சிக்காமல் கரை ஏறிய முக்தர்கள, நித்யஸூரிகள் ஆகியவர்களால் பெருமையாகப் போற்றப்படும் எம்பெருமானாரே! இவ்விதமாக நாம் ஒருவருக்கு ஒருவர் பயனுள்ளவர்களாக உள்ளோம். இப்படி உள்ளபோது, இனி உள்ள காலங்களில் நாம் ஒருவரை ஒருவர் பிரிவதற்குக் காரணம் ஏதேனும் உண்டாகுமோ? (உண்டாகாது)
23 இராமானுச நூற்றந்தாதி(பாசுரங்கள் 45-46) February 20, 2008
Posted by sridharan in இராமானுச100அந்தாதி.add a comment
விளக்கவுரை – உடையவரே! உமது திருவடிகளைத் தவிர்த்து நாங்கள் பெறும் புருஷார்த்தம் வேறு ஏதும் இல்லை. இத்தகைய உயர்ந்த பேற்றினை உமது திருவடிகள் தவிர வேறு ஏதும் அளிக்காது. இவற்றைப் பெறும் உபாயம் வேறு ஏதும் இல்லை. எம்பெருமானாரின் திருவடிகளைக் கண்டு உணர்ந்த நமக்கு – பரமபதமும் உயர்ந்த இடம் அன்று, பகவத் ப்ராப்தியும் உயர்ந்த உபாயம் அன்று, பக்தியோகமும் உயர்ந்தது அன்று. இப்படிப்பட்ட உமது திருவடிகளின் உன்னதமான தன்மையை அறிந்தவர்கள்; இதனை அறியாமல் உள்ள நான் – ஆகிய இரு பிரிவினருக்கும் உமது செம்மையான திருக்கல்யாண குனங்களை, எந்தவிதமான வேறுபாடும் பாராமல் அருளினீர்! ஒரு பொருள் கொடுத்தால், அதற்குப் பதில் ஒரு துணி கொடுப்பது போல் அல்லாமல், எங்களிடம் இருந்து எதனையும் எதிர்பாராமல், உம்மையே அல்லவா நீவிர் எங்களுக்குக் கொடுத்துவிட்டீர்! இப்படிப்பட்ட உமது திருக்கல்யாண குணத்தை உண்மையாகவே, உள்ளது உள்ளபடி கூற வேண்டுமானால், அது அரிய செயலாகவே அமையும்.
46. கூறும் சமயங்கள் ஆறும் குலைய * குவலயத்தே மாறன் பணித்த மறை உணர்ந்தோனை * மதியிலியேன் தேறும்படி என் மனம் புகுந்தானைத் திசை அனைத்தும் ஏறும் குணனை * இராமானுசனை இறைஞ்சினமேஇந்த உடலே ஆத்மா என்றும், உடல் பரிணாமமே ஆத்மா என்றும், அணுவே ஆத்மா என்றும், ஞானம் மட்டுமே உள்ளது என்றும், சூன்யம் மட்டுமே உண்மை என்றும், ப்ரஹ்மம் என்பது குணங்கள் அற்றது என்றும், ப்ரஹ்மம் முதலான பலவும் மித்யா (பொய்) என்றும், ருத்ரனே பரமாத்மா என்றும் – பல்வேறு தாழ்வான, உண்மையற்ற கருத்துக்கள் கூறிய மதங்கள் அனைத்தும் நாசம் அடைந்தன. எப்போது? இந்த உலகத்தில், மயர்வறு மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்கள் அவதாரம் செய்த காரணத்தால் புண்ணியம் அடைந்த உலகில், நம்மாழ்வாரால் அருளிச் செய்யப்பட்ட தமிழ் வேதத்தை அறிந்து, பரிபூர்ண ஞானம் பெற்ற எம்பெருமானாரின் வாதங்களால் ஆகும். அனைத்துத் திசைகளிலும் பரவிய தனது திருக்கல்யாண குணங்களால் புகழ் பெற்ற எம்பெருமானார், சிறிதும் ஞானம் இல்லாத எனது இதயத்தில் வந்து புகுந்து கொண்டார். இப்படியாக இவர் செய்த உபகாரத்திற்கு ஏற்ற கைம்மாறு தெரியாமல், அவரது திருவடிகளிலே பணிந்தேன்.
22 இராமானுச நூற்றந்தாதி(பாசுரங்கள் 43-44) February 19, 2008
Posted by sridharan in இராமானுச100அந்தாதி.add a comment
விளக்கவுரை – எம்பெருமானார் அவதரித்ததால் புண்ணியம் செய்த இந்தப் பூமியில் வசிப்பவர்களே! இத்தனை காலமாக உலக விஷயங்கள் மட்டுமே உண்மை என்று திரிந்து கொண்டிருக்கும் உங்களுக்கு, இதே போன்ற நிலையில் இருந்து எம்பெருமானாரால் திருத்தப்பட்ட நான் உபதேசிக்க உள்ளேன். தர்மம் என்பது தழைப்பதையே பொறுத்துக் கொள்ள இயலாமல், தான் மட்டுமே விளங்கும்படி இருப்பது இந்த கலிகாலமாகும். இத்தகைய கலியை, அந்தக் கலிபுருஷனுடன் சேர்ந்து அதர்மங்களையும் ஓடிவிடச் செய்யும்படியான அதிசயம் ஒன்று உண்டு. அது “இராமானுசா”, என்று எம்பெருமானாரின் திருநாமத்தைக் கூறுவதே ஆகும். எம்பெருமானின் திருநாமங்கள் போன்று ஆயிரம் திருநாமங்கள் கூற வேண்டிய அவசியம் இல்லை – ஒருமுறை உடையவரின் திருநாமத்தைக் கூறினாலே போதுமானது. இதனால் நிகழ்வது என்ன? எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்யும் ஸம்பத்து, அவன் மீது பக்தி என்னும் ஸம்பத்து, பகவத்ஞானம் என்னும் ஸம்பத்து ஆகியவை உண்டாகிவிடும். இந்தத் திருநாமத்தைக் கூறும்போது நாக்கில் அமிர்தம் சுரந்தபடி இருக்கும். எந்தவிதமான ப்ராயச்சித்தம் செய்தாலும் நீங்காமல் உள்ள பாவங்கள், தோஷங்கள் அனைத்தும், இந்தத் திருநாமத்தைக் கூறிய உடனேயே, வேருடன் களையப்பட்டுவிடும்.
44. சொல்லால் தமிழ் ஒரு மூன்றும் * சுருதிகள் நான்கும் எல்லை இல்லா அறநெறி யாவும் தெரிந்தவன் * எண்ணரும் சீர் நல்லார் பரவும் இராமானுசன் திருநாமம் நம்பிக் கல்லார் அகல் இடத்தோர் * எது பேறு என்று காமிப்பரே.விளக்கவுரை – அநந்தா என்றும், விபுலா என்றும் அழைக்கப்படும் இந்த அகண்ட பூமியில் உள்ள மனிதர்களுக்கு உயர்ந்தவற்றை நான் உபதேசித்தாலும், அவர்கள் அதில் ஈடுபாடு கொள்ளாமல் இருப்பார்கள்; அறிவு கெட்டு திரிவார்கள்; நாம் சரணம் அடையும் இடம் எது என்று தேடியபடி, அங்கும் இங்கும் செல்வார்கள்; இப்படியாகத் தங்கள் வாழ்வை வீணடிப்பார்கள். மேலும் இவர்கள் செய்வது என்ன? தமிழ் மொழியில் உள்ள இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றும் கொண்டதாகவும், சொற்கள் என்னும் மாலைகள் உடையதாகவும் உள்ள தமிழ்; நான்கு வேதங்கள்; எண்ணற்றதும், எல்லையற்றதும் ஆகிய தர்ம நெறிகள் ஆகியவற்றை அறிந்தவர் எம்பெருமானார்; எண்ணற்ற திருக்கல்யாண குணங்கள் கொண்டவர்; மிகவும் உயர்ந்தவர்களால் சூழப்பட்டவர் – இப்படிப்பட்ட எம்பெருமானாரின் திருநாமத்தை ஒருமுறை நான் உபதேசிப்பதைக் கேட்டு, உச்சரித்தாலே போதும், இவர்களின் தேடுதலுக்கு விடை கிட்டும் – ஆனால் செய்ய மறுக்கிறார்களே!
21. இராமானுச நூற்றந்தாதி(பாசுரங்கள் 41-42) February 18, 2008
Posted by sridharan in இராமானுச100அந்தாதி.add a comment
விளக்கவுரை – மாறிமாறிப் பல பிறவிகள் எடுக்கும் மனிதர்கள் போன்று மனிதன், விலங்கு என்ற பல ரூபங்களில் இராமனாகவும், கண்ணனாகவும் எம்பெருமான் அவதரித்தான். “அகலகில்லேன் இறையும்” எனத் தன்னைவிட்டுப் பிரியாத பெரியபிராட்டியுடன்வன் எப்போதும், எங்கும், அனைவரின் கண்களில் புலப்படும்படி நின்றாலும் – இந்த உலக மக்கள் செய்வது என்ன? இவனே நமக்கு ஏற்ற எஜமானன் என்று அறியாமல் உள்ளனர், அறியாமல் இருந்தனர். ஆனால் இந்த உலகைக் காப்பாற்றுவதற்காக, பரமபதத்தில் இருந்து, நம் மீது கொண்ட கருணை காரணமாக, இந்தப் பூமியில் எம்பெருமானார் திருஅவதாரம் செய்தார். இதனால் நிகழ்ந்தது என்ன? இந்த உலகில் உள்ள மக்கள் பலரும், தங்களில் இயல்பான ஞானம் பெற்று, அனைவருக்கும் பந்துவாக உள்ளவனும், அனைவரின் அந்தர்யாமியாக உள்ளவனும் ஆகிய ஸ்ரீமந் நாராயணனுக்கு அடிமைகள் ஆனார்கள்.
42. ஆயிழையார் கொங்கை தங்கும் * அக்காதல் அளறு அழுந்தி மாயும் என்னாவியை வந்து எடுத்தான் இன்று * மாமலராள் நாயகன் எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும் தூயவன் * தீது இல் இராமானுசன் தொல் அருள் சுரந்தே.விளக்கவுரை – தங்கள் உடலில் உள்ள குற்றம் குறைகள் தெரியாதபடி மறைத்து உடை மற்றும் ஆபரணங்கள் அணிந்த பெண்களின் ஸ்தனங்களில் எனது ஆத்மாவை ஈடுபடுத்தியபடியே இருந்தேன். அப்போது எம்பெருமானார் செய்தது என்னவெனில் – அனைத்து மலர்களிலும் உயர்ந்த தமர் மலரில் வாசம் செய்யும் பெரியபிராட்டியின் நாயகனாக உள்ளவனும், திருவரங்க மாநகரில் கண்வளர்பவனும் ஆகிய பெரியபெருமாளே அனைத்து உயிர்களின் எஜமானன் என்று உபதேசம் செய்தார். இப்படிப்பட்ட உபதேசம் செய்தவரும், தோஷங்கள் அற்றவரும், தூய்மையானவரும் ஆகிய எம்பெருமானார், இந்த உலகிற்கு வந்து அவருடைய இயல்பான கருணையை அனைவருக்கும் சுரந்தார்.
20. இராமானுச நூற்றந்தாதி(பாசுரங்கள் 39-40) February 17, 2008
Posted by sridharan in இராமானுச100அந்தாதி.add a comment
விளக்கவுரை – எனது உள்ளமே! நாம் செய்வது என்ன? மிகையான செல்வம், புத்திரர்கள், வசிப்பதற்குச் சிறந்த நிலம், மலர்கள் அலங்கரித்த மனைவி ஆகியவற்றை மட்டுமே விரும்பியபடி உள்ளோம். இவற்றையே மிகவும் உயர்ந்த பொருள்கள் என்று உணவையும் மறந்து, இளைத்து நிற்கிறோம் (இங்கு உணவு என்பது உண்ணும் உணவு, ஞானம் ஆகிய இரண்டையுமே குறிக்கும்). இதனைத் திருமங்கையாழ்வார் – தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும் நோயே பட்டொழிந்தேன் – என்றார் அல்லவோ? இப்படிப்பட்ட அஜ்ஞானம் மூலம் நமக்கு ஏற்படும் கொடூரமான துயரங்கள் அனைத்தையும் நீக்கி, தன்னுடைய மேன்மேலும் எல்லையற்றுப் பெருகியபடி உள்ள திருக்கல்யாண குணங்களை நமக்கு வெளிப்படுத்தியபடி உள்ளவர் எம்பெருமானார் ஆவார். இவர் நமக்காகச் செய்யும் ரக்ஷணங்கள் (நம்மைக் காப்பாற்றும் செயல்கள்) மற்றவர்களால் செய்யவும் இயலுமோ? அந்தக் கண்ணன் கூட – தூது செல்வது, தேர் ஓட்டுவது, கீதை உபதேசம் செய்வது – போன்ற பலவற்றையும் பாண்டவர்களுக்குகாக மட்டுமே, குறிப்பாக அவர்களில் ஒருவனான அர்ஜுனனுக்காக மட்டுமே செய்தான் அல்லவோ? ஆனால் எம்பெருமானார் அனைவருக்கும், அனைத்தையும் உபதேசித்தார் அன்றோ? ஆக இவர் போன்று நமக்கு அந்த மாயக்கண்ணனாலும் உதவ இயலவில்லை என்பது உண்மைதானே! இப்படி உள்ளபோது பொருள், புத்திரர்கள், மனைவி போன்றவையா நம்மைக் காக்கும் – என்று கருத்து.
40. சேமநல் வீடும் பொருளும் தருமமும் * சீரியநற் காமமும் என்றிவை நான்கு என்பர் * நான்கினும் கண்ணனுக்கே ஆமது காமம் அறம் பொருள் வீடு இதற்கென்று உரைத்தான் வாமனன் சீலன் * இராமானுசன் இந்த மண் மிசையே.விளக்கவுரை – மோக்ஷம் என்பதும், அயோத்யை மற்றும் அபராஜிதா என்றும் கூறப்படும் பரமபதம்; இத்தகைய மோக்ஷம் கிட்ட இயற்றும் செயல்களுக்குத் தேவையான பொருள்; இத்தகைய மோக்ஷம் என்பதற்கு உறுப்பாக உள்ள கர்மங்கள் என்னும் தர்மம்; சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டபடி உள்ள காமம் – இப்படிப்பட்ட நான்கையே புருஷார்த்தம் என்று சாஸ்திரம் அறிந்தவர்கள் கூறுவார்கள். இந்த நான்கிலும் எம்பெருமானிடத்தில் கொள்ளும் காமம் என்பதே மிகவும் உயர்ந்த, முதன்மையான புருஷார்த்தம் ஆகும். அவனுடைய திருமுகம் நமது கைங்கர்யம் கண்டு மகிழ்வதற்கு அடிப்படையாக உள்ள நமது கர்மங்களே புருஷார்த்தம் ஆகும். ஆக க்ருஷ்ண காமமே ப்ரதானமாக நம்மிடம் இருக்க வேண்டும். மற்ற மூன்று புருஷார்த்தங்களாகிய அறம் (தர்மம்), பொருள் (தனம்) மற்றும் வீடு (தர்மம் மற்றும் தனம் ஆகியவற்றுக்கு ஏற்ற இடம்) ஆகிய மூன்றும் க்ருஷ்ண காமத்திற்கு அடிமைகளே என்று உரைத்தார் – யார்? வாமனனாக வந்து வசிஷ்டர் போன்ற உயர்ந்தவர்கள் தொடங்கி சண்டாளர்கள் வரை உள்ள அத்தனை மனிதர்கள், விலங்குகள் ஆகியவற்றின் தலைகளில், வேறுபாடு காணாமல், தனது திருவடிகளை வைத்து அருளிய த்ரிவிக்ரமன் போன்று – இந்த உலகத்தாரில் ஏற்றத்தாழ்வு பாராமல், அனைவருக்கும் உபதேசித்த எம்பெருமானார் ஆவார்.
19. இராமானுச நூற்றந்தாதி(பாசுரங்கள் 37-38) February 16, 2008
Posted by sridharan in இராமானுச100அந்தாதி.add a comment
குடி கொண்ட கோயில் இராமானுசன் குணம் கூறும் * அன்பர் கடி கொண்ட மாமலர்த்தாள் கலந்து உள்ளம் கனியும் நல்லோர் அடி கண்டு கொண்டு உகந்து * என்னையும் ஆளவர்க்கு ஆக்கினரே.
விளக்கவுரை – இந்தப் பூமி முழுவதும் பரவியுள்ள புகழ் கொண்டது எது என்றால் இராமாயணம் ஆகும். இத்தகைய இராமாயணம் என்னும் கரை புரண்டு ஓடும் பக்தி ரஸத்தை, தானே ஒரு கோவில் போன்று அவதரித்து, தன்னுள் வைத்திருப்பவர் உடையவர் ஆவார். பரமபுருஷனுக்கு வைகுண்டம், திருவேங்கடம், திருமாலிருஞ்சோலை போன்று இராமாயணத்தின் இருப்பிடமாக எம்பெருமானார் உள்ளார். இப்படிப்பட்ட எம்பெருமானாரின் திருக்கல்யாண குணங்களை, அவர் அவதரிப்பதற்கு முன்பே பலரும் இந்த உலகில் உள்ளவர்களுக்கு உபதேசம் செய்தனர். அவர்கள் யார் என்றால் – “கலியும் கெடும் கண்டு கொண்மீன்” என்று உடையவர் பிறப்பால் கலிகாலம் சீரடையும் என உபதேசம் செய்த ஸ்வாமி நம்மாழ்வார்; அவர் கூறியபடி உள்ள விக்ரஹத்தை மனதால் ஆராதித்த ஸ்வாமி நாதமுனிகள்; “ஆம் முதல்வன்” என்று வியந்த ஸ்வாமி ஆளவந்தார் – ஆகியோர் ஆவர். இப்படிப்பட்ட இவர்களுடைய பெருமை மிகுந்த திருவடித் தாமரைகளைத் தங்கள் உள்ளத்தில் கலந்து நின்றவர்கள் ஸ்வாமி கூரத்தாழ்வான் போந்றவர்கள் ஆவர். இப்படிப்பட்ட கூரத்தாழ்வான் போன்றோர் என்னைக் கண்டு, “இவனிடம் சிறிது நன்மை உள்ளது”, என்று உணர்ந்தனர். அவர்கள் தங்களைப் போன்றே என்னையும் “எம்பெருமானாருக்கு உரியவன்” என்று ஆக்கினர்.
38. ஆக்கி அடிமைநிலைப் பித்தனை என்னை இன்று * அவமே போக்கிப் புறத்திட்டது என்பொருளா முன்பு * புண்ணியர்தம் வாக்கில் பிரியா இராமானுச நின் அருளின் வண்ணம் நோக்கில் தெரிவரிதால் * உரையாய் இந்த நுண்பொருளே.விளக்கவுரை – வெகுகாலம் இந்த உடலும் ஆத்மாவும் ஒன்று என்றே எண்ணியிருந்தேன்; அதன் பின்னர் அவை வெவ்வேறு என உணர்ந்த போதிலும், இந்த ஆத்மாவும் ஸர்வேச்வரனும் ஒன்று என எண்ணியிருந்தேன்(ஈச்வரோ அஹம்); அதன் பின்னர் வெகுகாலம் உலக இன்பங்களில் திளைத்தபடி இருந்தேன். இப்படி இருந்த என்னை, அவற்றில் இருந்து நீவிர் (எம்பெருமானார்) விடுவித்தீர். அதனைத் தொடர்ந்து, என்னை எம்பெருமானுக்கு அடிமையாக்கி, அவனுக்கு மட்டுமே கைங்கர்யம் செய்யும்படி பணித்தீர். இது நாள்வரை எனது உயிரை மற்ற விஷயங்களில் நான் வீணாக்கும்படிச் செய்து விட்டு, நீவிர் பேசாமல் நின்றது ஏன்? (நான் அறியேன்). மிகுந்த நன்மை உள்ளவர்கள் மற்றும் “பொலிக பொலிக பொலிக” என்று கூறும் ஸ்வாமி நம்மாழ்வார் போன்றவர்கள் ஆகியோர்களின் வாக்கில் எப்போதும் நிலைக்கும் எம்பெருமானாரே! எம்பெருமானின் லீலையானது என் போன்றவர்களை மோக்ஷம், பந்தம் ஆகிய இரண்டிலுமே ஈடுபடுத்திவிடும். ஆனால் உமது கருணை என்பது மோக்ஷத்தில் மட்டுமே ஈடுபடுத்தவல்லது அல்லவோ? இப்படிப்பட்ட மேன்மை உடைய உமது சிந்தனை (ஏன் என்னை இத்தனை நாள்கள் திருத்தாமல் காலம் கடத்தினீர் என்ற கேள்விக்கான விடை) எத்தனை ஆராய்ந்தாலும் அறிவதற்குக் கடினமே ஆகும். ஆகவே இந்த நுட்பமான சிந்தனை குறித்து நீரே எனக்குக் கூறவேண்டும்.
18. இராமானுச நூற்றந்தாதி(பாசுரங்கள் 35-36) February 15, 2008
Posted by sridharan in இராமானுச100அந்தாதி.Tags: amudhanar, karunai, ramanuja nootrandadi, vishnu
add a comment
விளக்கவுரை – எம்பெருமானாரைத் தவிர்த்து மற்றோருவரை நான் பரதேவதையை என்று கூறமாட்டேன், அதனை விரும்பவும் மாட்டேன். மதுரகவியாழ்வார் -தேவு மற்றறியேன் – என்று நம்மாழ்வார் குறித்து இருந்தது போன்றும்; ஸ்வாமி மணவாளமுனிகள் – உன்னை ஒழிய ஒரு தெய்வம் மற்றறியா மன்னுபுகழ்சேர் வடுகநம்பி – என்று புகழ்ந்த ஸ்வாமி வடுகநம்பி போன்றும் – நான் இருப்பேன். அனைத்து திசைகளிலும் கடலால் சூழப்பட்ட உலகில் உள்ள க்ஷுத்ரன் ஒருவனைக் குறித்து, “நீர் நிலம் என்று வேறுபாடு காணாமல், எங்கும் ஒரே தன்மையுடன் பெய்யும் மழை போன்று குணம் உள்ளவன்”, என்று மற்றவர்களைத் துதிக்கமாட்டேன். “திருவரங்கம்” என்று கூறினாலே போதும் – அந்தச் சொல்லைக் கேட்டு, காதல் வயப்பட்டு நிற்கும் எம்பெருமானாரின் தாமரை போன்ற திருவடிகளை நான் மறக்க மாட்டேன். இவ்விதம் நான் உள்ளபோது, எம்பெருமானாரின் தொடர்பு உள்ள என்னைக் கர்மங்கள் மற்றும் கர்மவினைகள் எவ்விதம் பாதிக்கும்?
36. அடல்கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் * அன்று ஆரணச்சொல் கடல் கொண்ட ஒண்பொருள் கண்டளிப்ப * பின்னும் காசினியோர் இடரின்கண் வீழ்ந்திடத்தானும் அவ்வொண்பொருள் கொண்டு அவர்பின் படரும் குணன் * எம் இராமானுசன்தன் படி இதுவே.விளக்கவுரை – முதலையால் பீடிக்கப்பட்ட கஜேந்திரனையும், அச்வத்தாமனின் ப்ரஹ்மாஸ்திரத்தில் இருந்து பரீக்ஷத்தையும் காத்த அழகான சக்கரம் ஏந்தியவன்; அனைத்து உயிர்களின் நாயகன் – இப்படிப்பட்ட வாஸுதேவன் செய்தது என்ன? ஸமுத்திரத்தில் மறைந்து கிடந்த இரத்தினக் கற்களை வெளியெடுத்தது போன்று வேதங்கள் என்னும் கடலில் உள்ள ஆழ்பொருள்களை கீதாசாஸ்திரமாக அனைத்து ஜீவன்களும் உய்யும்படி வெளிப்படுத்தினான். ஆனால் இந்த உயர்ந்த சாஸ்திரத்தைப் பின்பற்றாமல், கலியுகத்தில் ஸம்ஸாரம் என்னும் பிடியில் இந்த உலகம் சிக்கித் துன்பப்படுவதைக் கண்டு எம்பெருமானாரின் இளகிய மனம் பொறுக்கவில்லை. எனவே அந்த சாஸ்திரத்தின் மெய்ப்பொருளை திருக்கோட்டியூர் நம்பியிடம் கற்றுத் தெளிந்து, தானும் அந்தச் சாஸ்திரத்திற்குப் பாஷ்யம் அருளிச்செய்தார். இதனை அனைவருக்கும் உபதேசித்து, அதனைப் பின்பற்றுபவர்களை இன்றளவும் தொடர்ந்து வரும் உயர்ந்த குணம், நம்முடைய உடையவரின் திருக்குணம் ஆகும்.
17. இராமானுச நூற்றந்தாதி(பாசுரங்கள் 33-34) February 14, 2008
Posted by sridharan in இராமானுச100அந்தாதி.Tags: amudhanar, muni, prabandam .iyarpaa, ramanuja nootrandadi
add a comment
விளக்கவுரை – அழகு, நறுமணம், குளிர்ச்சி ஆகிய தன்மைகள் மிகுதியாகவும் இலைகள் நெருங்கவும் உள்ளது தாமரை மலராகும். இந்தத் தாமரை மலரின் பரிமளம் என்பது ஒரு வடிவு கொண்டதோ என்று கூறும்படி, இதில் அவதரித்தவள் பெரியபிராட்டி ஆவாள். இவள் விரும்பும் நாதனாக, இவனை மட்டுமே விரும்பும் நாயகனாக வாஸுதேவன் உள்ளான். அடியார்களுக்கு ஏற்படும் துன்பம் கலைய, கஜேந்திரனைக் காத்தது போன்று துயர் நீக்கத் தனது கையில் எப்போதும் சக்கரத்தாழ்வானை வைத்துள்ளான். மேலும் நந்தகம் என்ற வாள், சார்ங்கம் என்ற வில், ஞானத்திற்கு இடமாகிய பாஞ்சஜன்யம் என்ற வலம்புரிச் சங்கு ஆகியவற்றைத் தனது கைகளில் கொண்டுள்ளான். இந்த ஆயுதங்கள் அனைத்தும், இந்த “இருள் தருமாஞாலத்தை” காப்பாற்றுவதற்காக, இந்த உலகிற்கு வந்து, இந்தச் செயலில் ஈடுபட்டுள்ள எம்பெருமானாருக்குத் துணையாக நிற்கின்றன. அல்லது, இவையே எம்பெருமானாராக அவதரித்துள்ளன என்றும் கூறலாம்.
34. நிலத்தைச் செறுத்து உண்ணும் நீசக்கலியை * நினைப்பரிய பலத்தைச் செறுத்தும் பிறங்கியதில்லை * என் பெய் வினை தென் புலத்தில் பொறித்த அப்புத்தகச் சும்மை பொறுக்கியபின் நலத்தைப் பொறுத்தது * இராமானுசன் தன் நயப்புகழேவிளக்கவுரை – தர்மம், அர்த்தம், காமம் (அறம், பொருள், இன்பம்) மற்றும் மோக்ஷம் ஆகிய நான்கு புருஷார்த்தங்கள் ஏற்படுவதற்கு இடமாக உள்ளது இந்தப் பூமியாகும். இந்தப் பூமியில் உள்ள மனிதர்களை மயங்க வைக்கும்; அவர்களுக்குத் துயரமும் ஏற்படவைக்கும்; மனிதர்களில் சண்டாளர்கள் போன்று, யுகங்களில் தாழ்வானது; மனதால் ஸர்வேச்வரனின் வலிமையைக்கூட அறிந்து கொள்ளலாம், ஆனால் இதன் வலிமையை அறிய இயலாது – இப்படிப்பட்ட தன்மைகள் உடையது எது என்றால் கலிகாலமாகும். சூரியன் உதயம் ஆனவுடன் இருள் விலகியது போன்று, எம்பெருமானார் திருஅவதாரம் செய்தவுடன் இந்தக் கலியின் தோஷம் விலகியது. இவ்விதமாக எம்பெருமானார் இந்த உலகைக் காப்பாற்றினார். இவ்விதம் மிகவும் உயர்வான செயல்கள் செய்த பின்னரும் எம்பெருமானாரின் உயர்ந்த திருக்கல்யாண குணங்கள் பிரகாசம் அடையவில்லை. பின்னர் வேறு எதன் மூலம் பிரகாசம் அடைந்தது? பல ஆண்டுகளாக நான் இயற்றி வந்த பாவங்கள் அனைத்தும், தெற்குத் திசையை இருப்பிடமாக உடைய யமலோகத்தில் சித்திரகுப்தனால் அவன் சுவடிகளில் எழுதப்பட்டிருந்தது. அந்தப் பாவங்களையும், அந்தச் சுவடிகளையும் எம்பெருமானார் அழித்தார். அதன் பின்னரே அவரது குணங்கள் பிரகாசம் பெற்றன.
16. இராமானுச நூற்றந்தாதி(பாசுரங்கள் 31,32) February 13, 2008
Posted by sridharan in இராமானுச100அந்தாதி.Tags: amudahanar, kalai, noortrandadi, prabandam, ramanuja
add a comment
பொருள் – ஸம்ஸாரபந்தம் மற்றும் மோக்ஷம் ஆகிய இரண்டின் தன்மைகளையும் அறியும் மனமே! பல ஆண்டுகள், பல மாதங்கள், பல நாட்கள் என்றுள்ள காலங்கள் முழுவதிலும் – தேவர்கள், மனிதர்கள், விலங்குகள் என்று பலவாகப் பிறந்தும், இறந்தும் உழல்கின்றோம். இவ்விதம் இன்று வரை நான் எம்பெருமானாரின் திருவடிகள் பற்றிய சிந்தனை இல்லாமல் இருந்தேன். ஆனால் இன்று நடந்தது என்ன? காண்பதற்கு ஏற்ற அகன்ற தோள்களை உடையவனும், நாம் சரணம் புக ஏற்ற எஜமானன் போன்றவனும், “நகரேஷு காஞ்சி” எனப்படும் காஞ்சீபுரத்தில் தானே வந்து ஹஸ்திகிரியில் நின்றவனும் ஆகிய பேரருளானனின் அழகான பொருந்திய திருவடிகளைத் தனது தலைக்கு ஆபரணமாகப் பூண்டு, அவன் மீது இடைவி்டாது பக்தி கொண்டவர் எம்பெருமானார் ஆவார். இத்தகைய எம்பெருமானாரிடம் சென்று – உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே – என்று கூறும்படி பொருந்தி நின்றேன்.
32. பொருந்திய தேசும் பொறையும் திரலும் * புகழும் நல்ல திருந்திய ஞானமும், செல்வமும் சேரும் * செறு கலியால் வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்த அருந்தவன் * எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே.பொருள் – இருள் தரு மாஞாலம் என்றபடி, கலியின் பிடியில் சிக்கி, துக்கப்பட்டபடி உள்ள இந்தப் பூமியைக் காப்பாற்ற, தனது கருணை காரணமாகப் பரமபதத்தில் இருந்து இறங்கி எம்பெருமானார் வந்தார். திருக்கோட்டியூர் நம்பி தனக்கு அளித்த சரமச்லோகத்தின் (இது ஸ்ரீமத் பகவத் கீதையில் உள்ள பதினெட்டாவது அத்தியாயம், 66 ஆவது ச்லோகம்) பொருளை, எந்தவித பயனும் எதிர்பாராமல், உலகம் அனைத்திற்கும் அளித்தார். ஸ்ரீரங்கநாயகியை முன்னே நிறுத்தி, ஸ்ரீரங்கத்தின் நாதனான அழகிய மணவாளனின் திருவடிகளில் சரணாகதி செய்தார். இவ்விதம் சரணாகதி என்ற தவம் உடைய, எங்கள் ஸ்வாமியான, எம்பெருமானாரை சரணம் புகுந்ததால் கிட்டுவது என்ன தெரியுமா? தங்கள் ஸ்வரூபத்திற்கு ஏற்ற மதிப்பைப் பெறுவார்கள். பௌத்தர்கள், யாதவப்ரகாசன், யஜ்ஞமூர்த்தி போன்றவர்கள் பெற்றிருந்த போலியான மதிப்பு போன்று அல்லாமல், உண்மையான மதிப்பு என்று கருத்து. மிகுந்த பொறுமையைப் பெறுவார்கள். பகவானுக்கும் அவனது அடியார்களுக்கும் இடைவிடாமல் கைங்கர்யம் செய்யும் பலன் பெறுவார்கள். சரியான முறையில் பெறப்பட்ட உயர்ந்த ஞானம் பெறுவார்கள். இவை அனைத்தையும் நாம் நாடிப் போகவேண்டுமா? அவசியம் இல்லை, பெரியபிராட்டியின் கடாக்ஷம் மூலம் ஓடிவரும் செல்வம் போன்று, இவை தாமாகவே நம்மிடம் ஓடி வந்து சேர்ந்துவிடும்.