ஸ்ரீ குணரத்ன கோசம்-61 December 11, 2007
Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்.add a comment

பொருள் – தாயே! ஸ்ரீரங்கநாயகீ! ஸ்ரீரங்கத்தில் அடியார்களான எனது நண்பர்களுடன் நான் நூறு வருடங்கள் வாழ வேண்டும். அப்படி உள்ளபோது உன்னைத் துதிக்க எந்தவிதமான தடையும் இல்லாமல், துன்பங்கள் சூழாமல், இன்பம் மட்டுமே பெருகி நிற்க வேண்டும். உனக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற உயர்ந்த இன்பத்தை நான் அனுபவிக்க வேண்டும். உங்கள் (நம்பெருமாளையும் சேர்த்துக் கூறுகிறார்) திருவடியில் உள்ள துகள்களுடன் நானும் ஒரு துகளாகக் கலந்து இருக்க வேண்டும். நீயே எனக்குத் தாயாகவும், தகப்பனாகவும், அனைத்து விதமான உறவாகவும் இருத்தல் வேண்டும். நான் மோக்ஷம் அடையத் தகுதியாக உள்ள அனைத்து உபாயங்களும் நீயே ஆகக்கடவாய். இப்படியாக என் மீது உனது கருணையை நீ செலுத்துவாயாக.
விளக்கம் – இங்கு தன்னை திருவரங்கத்தில் பல ஆண்டுகள், திவ்யதம்பதிகளுக்குக் கைங்கர்யம் செய்தபடி இருக்க வேண்டும்; அந்தக் கைங்கர்யத்துக்கு எந்தவிதமான இடையூறும் வரக்கூடாது என்று வேண்டுகிறார். கத்யத்ரயத்தில் எம்பெருமானாரிடம் நம்பெருமாள், “அத்ரைவ ஸ்ரீரங்கே ஸுகமாஸ்வ” என்று வாழ்த்திக் கூறியது போன்று, தனக்கு இவள் கூற வேண்டும் என்று நிற்கிறார் போலும்.
படம் – சரணாகதி கத்யத்தில் எம்பெருமானாரிடம் ஸ்ரீரங்கநாச்சியார் “அஸ்து தே” என்று கூறியது போன்று, இங்கு இருவரும் சேர்ந்து வாழ்த்துகின்ற கண்கொள்ளாக் காட்சி (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).
ஸ்ரீபராசர பட்டர் அருளிச் செய்த ஸ்ரீகுணரத்னகோசம் ஸம்பூர்ணம்
ஸ்ரீரங்கநாச்சியார் சமேத ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளே தஞ்சம்
உலகம் உய்ய வந்த எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம்
ஸ்ரீபராசரபட்டர் திருவடிகளே தஞ்சம்
ஸ்ரீ குணரத்ன கோசம்-60 December 10, 2007
Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்.1 comment so far

பொருள் – தாயே! ஸ்ரீரங்கநாயகீ! இப்படியாக நான் பல விதமான கள்ளத்தனம் நிறைந்து, நு ற்றுக்கணக்கான தவறுகள் உடையவனாக இருக்கிறேன். இருந்தாலும் உனது அருள் பெற்றவர்களும், உண்மையை கூறுபவர்களும் ஆகிய ஆழ்வார்கள் முதலான முன்னோர்கள் கூறியதையே பின்பற்றி நிற்கிறேன் (இப்படிக் கூறுவதும் ஒரு வகையில் பொய் என்கிறார்). எனக்கு உனது திருவடிகளைப் பிடித்துக் கொள்வதற்கு இதைவிட வேறு எந்த உபாயமும் இல்லை. வேறு புகலிடம் இல்லாத எனக்கு உனது கருணையால் நீயே புகலிடமாக உள்ளாய்.
விளக்கம் – இங்கு இவர் கூறுவது என்ன? நான் ஆசார்யர்களின் வாக்குகளைப் பின்பற்றுவதாகக் கூறுவது ஒரு பொய்யே ஆகும். இருந்தாலும் அவர்களை நான் தொழுகிறேன் என்ற காரணத்திற்காகவாவது காப்பாற்ற வேண்டும் என்றார்.
படம் – ஆசார்யர்களைத் தொழுகிறேன் என்னும் காரணத்தை முன்னிட்டாவது தன்னைக் காக்கவேண்டும் என்று வேண்டி நிற்கும் ஸ்ரீபராசரபட்டர், திருவரங்கத்தில் உள்ளபடி (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்)
ஸ்ரீ குணரத்ன கோசம்-59 December 9, 2007
Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்.add a comment
பொருள் – தேவீ! ஸ்ரீரங்கநாயகீ! மோக்ஷம் அடையவேண்டும் என்ற உயர்ந்த ஆசையும், அந்தப் பதவியை அடைய வேண்டியதற்காக இயற்றப்பட வேண்டிய யோகங்கள் செய்யும் தகுதியும் எனக்கு இல்லை. இந்த யோகங்களில் விதித்துள்ளவற்றை நான் இதுவரை செய்யவும் முயற்சிக்கவில்லை. “சரி! போகட்டும், இவற்றைப் பெறவில்லையே”, என்று எண்ணியாவது நான் வருத்தம் கொள்கிறேனா என்றால், அதுவும் இல்லை! இப்படியாக நான் ஞானயோகம், கர்மயோகம் , பக்தியோகம் ஆகிய உயர்ந்த செல்வங்களைப் பெறாத ஏழையாகவே உள்ளேன். மேலும் உன்னாலும், உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனாலும் பொறுக்க முடியாத பல குற்றங்களைச் செய்து வருகிறேன். இப்படிப்பட்ட தீய நடத்தையால் உனக்குப் பொறுத்துக் கொள்ள இயலாதவனாக உள்ளேன்.
விளக்கம் – இந்தச் ச்லோகத்தில் சரணாகதிக்கு வேண்டிய முக்கிய தகுதியான – என்னிடம் எந்த உபாயமும் இல்லை – என்று பகவானிடம் விண்ணப்பம் செய்வது விளக்கப்பட்டது காண்க. மேலும், பிராட்டியை முன்னிட்டே அவனை அடையவேண்டும் என்ற முறையால், இவளிடம் இதனைக் கூறுகிறார். மேலும் மறைமுகமாக, “எனக்குத் தகுதி ஏதும் இல்லை என்று எண்ணி, நீ என்னைக் கை விட்டுவிடுவாயா?”, என்று கேட்கிறார்.
படம் – பட்டர் கூறியதைக் கேட்டு நெகிழ்ந்த ஸ்ரீரங்கநாச்சியார் நம்பெருமாளிடம், “இந்தக் குழந்தையை நீவிர் கரையேற்ற வேண்டும்”, என்று கூறினாள். இதனை ஏற்று நம்பெருமாள், “அப்படியே செய்வோம்”, என்று தனது அபயஹஸ்தத்தைக் காண்பிக்கிறான். இதனைக் கண்டவுடன், அவன் திருமார்பில் உள்ள ஸ்ரீரங்கநாச்சியார் தனது மகிழ்ச்சியை, தன்னுடைய ஒளிர்தல் மூலம் உணர்த்துவது காண்க (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).
ஸ்ரீ குணரத்ன கோசம்-58 December 8, 2007
Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்.add a comment

பொருள் – தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனக்கு முன்னால் நின்று கொண்டு ஒருவன் தனது இரு கரங்களையும் தலைக்கு மேல் தூக்கி வணங்கினால் நீ துடித்துப் போகிறாய்! என்ன காரணம்? அவனது கைகள் நோகுமே என்றும், அந்தப் பாரத்தை அவன் தாங்குவானா என்றும் என்ணுகிறாய். இதனால் அவனுக்கு மிகுந்த செல்வமும், உனக்குக் கைங்கர்யம் செய்யும் வாய்ப்பையும், உயர்ந்த மோக்ஷத்தையும் அளிக்கிறாய். இத்தனை செய்த பின்னரும் உனது நிலை எப்படி உள்ளது? “ஐயோ! எதனை நினைத்து இந்தக் குழந்தை நம்மிடம் வந்தானோ? நாம் அளித்தது போதுமானதாக இருந்ததா? இதன் மூலம் இவனது வேண்டுதல் பலித்ததா? தெரியவில்லையே! நாம் குறைவாகக் கொடுத்து விட்டோமோ?”, என்று பலவாறு எண்ணியபடி, நீ வெட்கப்பட்டுத் தலையைச் சற்றே தாழ்த்தி அமர்ந்திருக்கிறாய். இத்தகைய உனது கொடைத்திறன் எத்தன்மை உடையது என்பதை நீயே கூறுவாயாக.
விளக்கம் – இங்கு ஸ்ரீரங்கநாச்சியார் வெட்கப்பட்டு அமர்ந்துள்ளதாக ஏன் கூற வேண்டும்? இதன் காரணம் – இந்தக் குழந்தை நம்மிடம் வந்து வேண்டி நின்றதைக் கொடுத்தோமா இல்லையா? நாம் குறைவாகக் கொடுத்துவிட்டோமோ? – என்று எண்ணுகிறாள் போலும்.
படம் – பட்டர் கூறுவது போன்று இங்கு ஸ்ரீரங்கநாச்சியார் சற்றே தலைதாழ்த்தி அமர்ந்துள்ளதைக் காண்க (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).
ஸ்ரீ குணரத்ன கோசம்-57 December 7, 2007
Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்.add a comment

பொருள் – தாயே! ஸ்ரீரங்கநாயகீ! தன்னைப் பற்றிக் கூட கவலைப்படாது மற்றவர்க்கு உதவும் தன்மை (ஔதார்யம்), மற்றவர் படும் துயரம் பொறுக்காமல் உள்ள தன்மை (காருணிகதா), அடியார்கள் செய்யும் குற்றத்தையும் மறந்து குணமாக ஏற்றுக் கொள்ளுதல் (வத்ஸலத்வம்) ஆகிய பல சிறந்த குணங்கள் ஸ்ரீரங்கநாச்சியாரான உன்னிடம் மிகவும் அதிகமாகவே உள்ளதே! நீ முன்பு சீதையாகவும் ருக்மிணியாகவும் திருஅவதாரம் செய்தபோதும் அந்தக் குணங்கள் உன்னிடம் இருந்தன என பலர் கூறுகின்றனர். அப்போது நீ கொண்டிருந்த அந்தக் குணங்கள், இப்போது நீ கொண்டுள்ள இந்த அர்ச்சை ரூபத்திற்குண்டான பயிற்சி போலும்.
விளக்கம் – அர்ச்சாவதாரத்தில் இந்தக் குணங்கள் கொள்ளவேண்டும் என்று எண்ணி, முன்பு எடுத்த பல திருஅவதாரங்களில் இவள் பயிற்சி எடுத்துக் கொண்டாள் போலும். பட்டை தீட்டத்தீட்ட அல்லவோ வைரம் ஒளிர்கிறது?
படம் – வானரர்களுக்கும் அன்பு பொழிந்த சீதை. இவ்விதம் விலங்கு இனத்திற்கும் கருணை செய்து பழகியதால்தான், இன்று நம் போன்று பாவம் செய்தவர்கள் ஸ்ரீரங்கநாச்சியார் முன்பாக நின்றாலும் அவளுக்குக் கோபம் வருவதில்லை போலும்.
ஸ்ரீ குணரத்ன கோசம்-56 December 6, 2007
Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்.add a comment

பொருள் – தாயே! ஸ்ரீரங்கநாயகீ! நீ பிறந்த இடம் என்ற காரணத்தினால் திருப்பாற்கடலை மிகவும் மதிக்கிறாய். நீ புகுந்த இடம் என்ற காரணத்தினாலும், உனது கணவன் மீது உள்ள காதல் என்னும் காரணத்தினாலும், அனைவரும் துதிக்கும் பரமபதத்தை மிகவும் விரும்புகின்றாய். ஆனால் இரண்டையும் நீ இப்போது நீ மறந்துவிட்டாய் போலும்! அதனால்தான் உனது பிள்ளைகளான எங்களைப் பாதுகாப்பதற்கு, உனக்கு ஏற்ற இடம் என்று மனதில் கொண்டு, நாங்கள் உள்ள ஸ்ரீரங்கத்தில் என்றும் மகிழ்வுடன் அமர்ந்தாய் போலும் .
விளக்கம் – ஸ்ரீரங்கம் என்ற பெயர், ஸ்ரீரங்கநாச்சியாராலேயே வந்தது. ரங்கம் என்றால் கூத்து நடக்கும் இடம் என்பதாகும். ஸ்ரீ என்பது ஸ்ரீரங்கநாச்சியாரைக் குறிக்கும். ஆக, இவள் மகிழும் இடம் என்று கருத்து.
படம் – பட்டர் இவ்விதம் கூறியதைக் கேட்ட நம்பெருமாள் பட்டரிடம், “ஸ்ரீரங்கத்தில் உள்ளதால் அவள் மகிழ்வுடன் இருக்கிறாள் என்று நீவிர் கூறினீர். அது சரியே! ஆனால் என்ன காரணம் என்று கூறவில்லையே! இதோ இது போன்று நம் திருமார்பில் உள்ளதால் அல்லவோ மகிழ்வுடன் உள்ளாள்”, என்று கூறியபடி, தன்னுடைய திருமார்பில் உள்ள பதக்கத்தில் அவள் அமர்ந்துள்ளதைக் காண்பிக்கிறான் போலும் (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).
ஸ்ரீ குணரத்ன கோசம்-55 December 5, 2007
Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்.add a comment

பொருள் – தாமரை மலரில் அமர்ந்தவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது கணவனான ஸ்ரீரங்கநாதனுக்கு உள்ள ஆயிரம் திருக்கைகள் என்ன, அழகான திருவடிகள் என்ன, அழகிய திருமுகம் என்ன, நீண்ட பெரிய கண்கள் என்ன, இவற்றைத் தவிர அவனிடம் பொருந்தியுள்ள பல திருக்கல்யாண குணங்கள் என்ன? இப்படியாக அவன் விச்வரூபம் எடுத்தபோதிலும், பல அவதாரங்கள் எடுத்த போதிலும் உனது காதல் என்னும் பெருவெள்ளத்தில் உண்டான ஒரு சுழலில் சிக்கி, மூழ்கி நிற்கிறான் அல்லவா?
விளக்கம் – இவன் எத்தனை ஸ்வரூப-ரூப-குணங்கள் கொண்டவனாக இருந்தாலும், அவளிடம் வசப்பட்டு அல்லவோ நிற்கிறான்? அவளது கடைக்கண் பார்வையில் சிக்கியே நிற்கிறான்.
படம் – அவளைப் போன்றே தானும் தோற்றம் அளித்தாலாவது, பட்டர் தன்னை இவ்விதம் புகழ்கிறாரா என்று பார்க்க மோஹினி அலங்காரத்தில் வந்தான் போலும் (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).
ஸ்ரீ குணரத்ன கோசம்-54 December 4, 2007
Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்.Tags: , 10 heads, ranganaki, ravanan, thirupaarkadal
add a comment

பொருள் – தாயே! சீதாபிராட்டியே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அன்பு நாயகனான ஸ்ரீரங்கநாதன் உன்னை அடைவதற்கும், உனது மகிழ்ச்சிக்காகவும் எதைத்தான் செய்யாமல் இருந்தான்? உனக்கு இன்பம் அளிக்க வேண்டும் என்பதற்காக நீ பிறந்த இடமான திருப்பாற்கடலில் எப்போதும் சயனித்துள்ளான். உன்னை அடைவதற்காக அந்தத் திருப்பாற்கடலைக் கடையவும் செய்தான். அந்தக் கடலின் மீதே இராமனாக வந்து அணை கட்டினான். ஒரு சிறிய கொடியை முறிப்பது போன்று ஒப்பற்ற சிவ தனுசை முறித்தான். பத்து தலைகள் உடைய இராவணனின் தலைகளை அறுத்து, தலை இல்லாத அவன் உடலை நடனமாடச் செய்தான்.
விளக்கம் – இவளுக்காக எதுவும் செய்யத் தயாராக நம்பெருமாள் உள்ளான். திருப்பாற்கடலில் சயனித்தும், கடைந்தும், கடக்கவும் செய்தான். இத்தனை செய்பவன், அவள் நமக்காக சிபாரிசு (புருஷகாரம்) செய்யும்போது, மறுக்கவா போகிறான்?
படம் – பட்டர் இந்தச் ச்லோகத்தை அருளிச் செய்தவுடன் அவரிடம் ஸ்ரீரங்கநாச்சியார், “குழந்தாய்! நீ கூறுவது அனைத்தையும் நான் ஒப்புக்கொள்கிறேன். எனக்காக அவன் இவை அனைத்தையும் செய்தான் என்பது உண்மை. ஆனால் இவை அவன் என் மீது கொண்ட அன்பால் ஆகும். உங்களுக்காக அவன் என்ன செய்தான்? நீங்கள் அனைவரும் கரையேறினால் அல்லவோ எனக்கு மகிழ்ச்சி? இதன் பொருட்டு அவன் என்ன செய்தான்?”, என்று கேட்டாள். உடனே பட்டர், “தாயே! அவன் எங்களுக்காக அல்லவோ, எங்களைக் கரையேற்ற, எங்கள் இராமானுசனைப் படைத்தான். ஆக, உன்னுடைய விருப்பத்தை அவன் புரிந்துதானே இவ்விதம் செய்தான்?”, என்று ஸாமர்த்தியமாகக் கூறினார்.
ஸ்ரீ குணரத்ன கோசம்-53 December 3, 2007
Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்.Tags: , sri ranga nachiyaar, sriranganayaki
1 comment so far

பொருள் – தாயே ஸ்ரீரங்கநாயகீ! உனது மகிமைகளையும் பெருமைகளையும் எப்படிக் கூறினாலும், இந்த உலகத்தில் உள்ளவர்கள் காதுகளில் அவை ஏறாது. இப்படிப்பட்ட (கொடிய) உலகத்தில் நீ இராமனின் துணைவியாக திருஅவதாரம் செய்தாய். எங்களைக் காப்பாற்றவே நீ தோன்றினாய். ஆனால் நடந்தது என்ன? நீ மிகுந்த துன்பங்களை அடைந்தாய் அல்லவா? மிகவும் மென்மையான மாலதி மலர்கள் போன்ற உனது திருப்பாதங்கள் நோகும்படியாகப் பாறைகளில் (காட்டில்) நடந்து சென்றாய். உனது கணவனைப் பிரித்து வாழ்தல் என்பது அந்தக் காட்டில் நடந்தது. இது அனைத்தும் எங்கள் மீது உனக்கு உள்ள கருணையால் அல்லவா நடைபெற்றது. போதும் தாயே! இப்படி எங்களுக்காக உனக்குத் துன்பங்கள் உண்டாகும்படி இருக்கும் உனது அந்தக் கருணையை நான் வெறுக்கிறேன்.
இப்படியாக நீ இங்கு வந்து எங்களைக் காக்க வேண்டுமா? இதற்கு நீ என்னிடம்,”இவ்வாறு நான் வரக்கூடாது என்று தடுப்பதற்கு நீ யார்?”, என்று உனது சுதந்திரத்தை முன்னிறுத்திக் கூறுகிறாய். அந்தச் சுதந்திரத்தையும் நான் வெறுக்கிறேன்.
விளக்கம் – தன்னால் ஸ்ரீரங்கநாச்சியார் எத்தனை இன்னல்கள் அனுபவித்தாள் என்று கூறிப் புலம்புகிறார். இத்தனைக்கும் காரணம் அவளது கருணை என்று கூறி, அந்தக் கருணையை தான் வெறுப்பதாகக் கூறுகிறார்.
படம் – அன்று சீதையாக இவள் கானகத்தில் நடந்ததைத் தடுக்க, பராசரபட்டர் இல்லை. ஆனால், அவளது திருவடிகள் அனுபவித்த வேதனைகளை துடைக்க வேண்டும் என்று பட்டர் எண்ணினார் போலும். அதனால்தான் அவருடைய கட்டளைக்கு ஏற்ப இன்றளவும் இவளது திருவடிகளுக்குப் பட்டுத் தலையணை வைக்கிறார்களோ? இதற்கான விடை பராசரபட்டருக்கே தெரியும் (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).
ஸ்ரீ குணரத்ன கோசம்-52 December 2, 2007
Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்.Tags: mahalakshmi, murali battar, ranganatha, renganatha, thayar
add a comment

பொருள் – அனைவருக்கும் தாயாக இருப்பவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அன்புக் கணவனான ஸ்ரீரங்கநாதன், குற்றங்கள் புரிகின்ற இந்த உலகில் உள்ள மக்களிடம், அவர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு, ஒரு தகப்பன் போல், அவர்கள் மீது கோபம் கொள்வான். அது போன்ற நேரங்களில் நீ அவனிடம், “என்ன செயல் நீங்கள் புரிகிறீர்கள்? இந்த உலகத்தில் குற்றம் செய்யாதவர் யார்?”, என்று இதமாகப் பேசுகிறாய். இதன் மூலம் அவன் எங்கள் குற்றங்களை மறக்கும்படிச் செய்கிறாய். இதன் காரணமாக எங்கள் தாய் ஸ்தானத்தில் நீயே உள்ளாய்.
விளக்கம் – பெரியாழ்வார் திருமொழியில் (4-9-2) – தன்னடியார் திறத்தகத்துத் தாமரையாளாகிலும் சிதகுரைக்குமேல் என்னடியார் அது செய்யார் – என்பது காண்க. இதன் பொருள் – இந்த உலகில் உள்ள அடியார்கள் ஏதேனும் தவறு இழைத்தவுடன், அதனை பெரியபிராட்டியே பகவானிடம் சுட்டிக் காண்பித்தாலும், அதனைப் பகவான் மறுத்து, மன்னித்துவிடுவான். அப்படிப்பட்ட அவனுக்கும் கோபம் வந்தால், ஸ்ரீரங்கநாச்சியார் தடுப்பதாகக் கூறுகிறார். அவனுக்குக் கோபம் வரும் என்பதற்குச் சான்று உண்டா என்றால், அவனே வராக புராணத்தில் – ந க்ஷமாமி – மன்னிக்கமாட்டேன் – என்றும், கீதையில் – மிகவும் தாழ்ந்த நிலைக்குத் தள்ளி விடுவேன் – என்று கூறியதையும் காண்க.
அந்த நேரத்தில் இவள் நம்பெருமாளிடம், “என்ன செயல் நீங்கள் புரிகிறீர்கள்? இந்த உலகத்தில் குற்றம் செய்யாதவர் யார்? நமது குழந்தைகள் அல்லவா இவர்கள்? அவர்கள் மீது கோபம் கொள்ள வேண்டாம்”, என்று தடுக்கிறாள். இதுவே புருஷகாரத்தின் (புருஷகாரம் = சிபாரிசு செய்தல்) அடிப்படையாகும்.
படம் – பட்டர் கூறியது போன்று ஸ்ரீரங்கநாச்சியார் நம்பெருமாளிடம் சிபாரிசு செய்தபடி உள்ளாள் போலும் (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).
