jump to navigation

6. இராமானுச நூற்றந்தாதி (பாசுரம் 9,10 ) February 2, 2008

Posted by sridharan in இராமானுச100அந்தாதி.
trackback
9 இறைவனைக் காணும் இதயத்து இருள்கெட * ஞானம் என்னும்
நிறைவிளக்கு ஏற்றிய பூதத்திருவடித்தாள்கள் * நெஞ்சத்து
உறைய வைத்தாளும் இராமானுசன் புகழ் ஓதும் நல்லோர்
மறையினைக் காத்து * இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே.

விளக்கவுரை – அனைத்திற்கும் எஜமானனாக உள்ளவனை நாம் அறிந்து, உணர்ந்து கொள்வதற்கு ஏதுவான கருவி நமது இதயமே ஆகும். இத்தகைய இதயத்தில் பூர்வகர்ம பலன்கள் காரணமாக, அஜ்ஞானம் என்ற இருள் சூழ்ந்து கிடக்கிறது. அத்தகைய இருள் நீங்கும் விதமாக, பரம்பொருள் பற்றிய ஞானம் என்ற பரிபூர்ணமான விளக்கை ஏற்றியவர் பூதத்தாழ்வார் ஆவார். இந்த விளக்கு எப்படி உள்ளது என்றால் – அன்பே தகளி, ஆர்வமே நெய், சிந்தனையே திரி என்று கொண்டு ஞானமயமாக உள்ளது. அதாவது – ஆழ்வாரின் பக்தி என்பதே விளக்கானது; ஆழ்வாரின் ஆர்வமே நெய்யானது; பகவத் அனுபவத்தில் எப்போதும் ஊறிக் கிடக்கும் ஆழ்வாரின் மனமே திரியானது; பரிபூர்ணமான ஞானம் என்பதே தீபமானது; இப்படியான ஒரு விளக்கை நாராயணனுக்கு ஏற்றினார். இத்தகைய பூதத்தாழ்வாரின் உயர்ந்த திருவடிகளைத் தனது நெஞ்சத்தில் எப்போதும் வாசம் செய்யும்படியாக வைத்து அனுபவிப்பவர் உடையவர் ஆவார். இப்படிப்பட்ட எம்பெருமானாரின் உயர்ந்த கல்யாணகுணங்கள் குறித்து முன்பே பல பெரியோர்கள் உரைத்தனர் – கலியும் கெடும் கண்டு கொண்மின் என்று இவரது பிறப்பை முன்பே உணர்த்தினார் நம்மாழ்வார்; இத்தகைய இவரது விக்ரஹம் இவ்விதம் இருக்கும் என்று காலம் முழுவதும் சிந்தித்தவர் நாதமுனிகள்; “ஆ முதல்வன்” என்று வியப்புற்றவர் ஆளவந்தார். மற்ற மதத்தினர் மூலம் வேதங்கள் அழியாமல் காத்து நிற்பவர்கள் இப்படிப்பட்ட உயர்ந்தவர்களே ஆவார்கள்.

10. மன்னிய பேரிருள் மாண்டபின் * கோவலுள் மாமலராள்
தன்னொடும் ஆயனைக் கண்டமை காட்டும் * தமிழ்த் தலைவன்
பொன்னடி போற்றும் இராமானுசற்கு அன்பு பூண்டவர் தாள்
சென்னியில் சூடும் * திருவுடையார் என்றும் சீரியரே.

விளக்கவுரை – ஆத்மாவை அஹங்காரம், அஜ்ஞானம் போன்ற இருள் பற்றியபடி உள்ளது. இத்தகைய நீண்ட இருளானது பொய்கையாழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் ஆகிய இருவர் ஏற்றிய ஞானதீபங்களால் நீக்கப்பட்டது. இவர்களுக்குப் பின் வந்தவர் பேயாழ்வார் ஆவார். இவர் தனது “ நீயும் திருமகளும்” என்னும் பாசுரம் மூலம் திருக்கோவலூரில் மஹாலக்ஷ்மியுடன் உள்ள க்ருஷ்ணனாகிய ஸர்வேச்வரனைக் கண்டதைக் காட்டினார் (இங்கு உள்ள தன்னொடுமாயனை என்பதை தன்னோடு +ஆயன் அல்லது தன்னோடு + மாயன் என்று பிரிக்கலாம்). ஆயன் என்பது திருக்கோவிலூரில் உள்ள ஆயனார் என்ற பெருமாளைக் குறிக்கும். மாயன் என்பது பாண்டவர்களுக்குத் தூது சென்று, அர்ஜுனனுக்குத் தேர் ஓட்டி, ஆயுதம் தொடமாட்டேன் என்ற சபதத்தை பாண்டவர்களுக்காக மீறி, அர்ஜுனனுக்காகச் சூரியனைத் தனது சக்கரத்தால் மறைத்து, கோவர்த்தனம் எடுத்து, அந்தணர் ஒருவரின் குழந்தை விஷயத்தில் அர்ஜுனன் செய்த சபதத்தை எண்ணி அவனைப் பல உலகங்கள் அழைத்துச் சென்று, சரமச்லோகம் உபதேசித்து – இப்படியாகப் பல வியப்பான செயல்கள் செய்த கண்ணனைக் குறிக்கும். இவ்விதம் தான் கண்டவனைப் பற்றி இனிய தமிழில் – திருக்கண்டேன், பொன்மேனி கண்டேன், திகழும் அருக்கண்ணி நிறமும் கண்டேன், செருக்கிளரும் பொன்னாழி கண்டேன், புரிசங்கைக் கண்டேன் – என்று பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதியை அருளிச் செய்தார். இவருடைய திருவடிகளை என்றும் போற்றும் ஸ்வபாவம் உடையவர் எம்பெருமானார் ஆவார். இப்படிப்பட்ட உடையவரின் மீது மாறாத அன்பும் பக்தியும் உடையவர்கள், அந்த பக்தியையே தங்கள் ஆபரணங்கள் என்று கருதி அலங்கரித்துக் கொள்ளும் உயர்ந்தவர்கள் உண்டு. இவர்களது திருவடிகளைத் தங்கள் தலையில் வைக்கப்படும் அழகான மலர்கள் போன்று ஏற்றுக் கொள்வாரும் உண்டு. இவர்கள் எந்தக் காலத்திலும் உயர்ந்து நிற்பவர்கள் ஆவர்.

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: