jump to navigation

15. இராமானுச நூற்றந்தாதி(பாசுரங்கள் 29,30) February 12, 2008

Posted by sridharan in இராமானுச100அந்தாதி.
Tags: , , ,
trackback
29. கூட்டும் விதி என்று கூடுங்கொலோ? தென்குருகைப்பிரான்
பாட்டென்னும் வேதப்பசுந்தமிழ் தன்னை * தன் பத்தி என்னும்
வீட்டின் கண்வைத்த இராமானுசன் புகழ் மெய்யுணர்ந்தோர்
ஈட்டங்கள் தன்னை * என் நாட்டங்கள் கண்டு இன்பம் எய்திடவே

விளக்கவுரை – தென்திசையில், பரமபதத்திற்கு இணையான ஸ்வபாவம் கொண்ட ஊராகிய ஆழ்வார் திருநகரியில் அவதரித்தவர் நம்மாழ்வார் ஆவார். அவருடைய திருவாய்மொழி என்பது செந்தமிழில் செய்யப்பட்ட வேதம் என்று கூறும்படி உள்ளது. இப்படிப்பட்ட திருவாய்மொழியை – ஈன்ற முதல் தாய் சடகோபன், இதத்தாய் இராமானுசன் – என்னும்படி, தனது இதயத்தில் எப்போதும் நிலை நிறுத்தியவர் எம்பெருமானார் ஆவார். அந்தத் திருவாய்மொழியை எப்போதும் கேட்டபடியும், உபதேசம் செய்தபடியும், வ்யாக்யானம் செய்தபடியும், திருக்குருகைபிரான் பிள்ளான் மூலம் வ்யாக்யானம் செய்வித்தபடியும் இராமானுசரின் திருக்கல்யாண குணங்கள் அமைந்திருந்தன. இப்படியாக எம்பெருமானாரின் குணங்கள் உள்ளன என்று அறிந்தவர்கள் கூரத்தாழ்வான், முதலியாண்டான் போன்றவர்கள் ஆவர். இவர்களையே எப்போதும் என் கண்கள் பார்த்தபடியும், அதனால் நான் ஆனந்தம் கொண்டபடியும் இருக்கும் உயர்ந்த வாய்ப்பு எப்போது அடியேனுக்குக் கூடுமோ?

30. இன்பம்தரு பெருவீடு வந்தெய்திலென்? * எண்ணிறந்த
துன்பம்தரு நிரயம்பல சூழிலென்? * தொல் உலகில்
மன் பல் உயிர்கட்கு இறைவன் மாயன் என மொழிந்த
அன்பன் அனகன் * இராமானுசன் என்னை ஆண்டனனே

விளக்கவுரை – மிகவும் பழைமையான இந்த உலகத்தில், அறியாமை மற்றும் பூர்வ கர்ம வாசனை ஆகியவற்றின் காரணமாக ஸம்ஸாரத்தில் சிக்கித் தவிக்கும் எண்ணற்ற ஆத்மாக்களின் எஜமானன்; த்ரிவிக்ரமனாக உலகம் அளந்து, நரஸிம்ஹமாக விரைவாக வந்து, ஜடாயு என்ற பறவையின் ஈமச் சடங்குகள் செய்து, குரங்குகளின் உதவியைக் கொண்டே இலங்கைக்குப் பாலம் அமைத்து, கோவர்த்தன மலையைக் கையில் எடுத்து – இவ்விதம் பல வியப்பான செயல்களைச் செய்யும் மாயன் – இவனே ஸர்வேச்வரன என்று எம்பெருமானார் உறுதிபட மொழிந்தார். அவர் ஸ்ரீபாஷ்யத்தின் மூலம் இவனே ஸர்வேச்வரன் என்று நிரூபித்து, உலகம் முழுமையும் உணரும்படிச் செய்தார். அனைவரிடமும் அன்பு பூண்டபடி உள்ளார். இப்படிப்பட்ட எம்பெருமானார், எதற்கும் உரிமை இல்லாத என்னைத் தத்து எடுத்து, என்னை ஆட்கொண்டார். இப்படிப்பட்ட உயர்ந்த புருஷார்த்தம் கிட்டிய பின் என் நிலை என்ன? எல்லையற்ற இன்பம் அளிக்கவல்லதும், மிகவும் உயர்ந்த புருஷார்த்தம் என்று கூறப்படுவதும் ஆகிய மோக்ஷம் கிட்டினாலும் என்ன; எண்ணற்ற துன்பம் அளிக்கவல்லதான நரகம் வந்து சூழ்ந்தாலும் என்ன – இவற்றை நான் ஒன்றாகவே நினைத்து, வருந்தாமல் உள்ளேன்.

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: