jump to navigation

20. இராமானுச நூற்றந்தாதி(பாசுரங்கள் 39-40) February 17, 2008

Posted by sridharan in இராமானுச100அந்தாதி.
trackback
39. பொருளும் புதல்வரும் பூமியும் * பூங்குழலாரும் என்றே
       மருள் கொண்டு இளைக்கும் நமக்கு நெஞ்சே * மற்றுளார் தரமோ?
      இருள் கொண்ட வெந்துயர் மாற்றித் தன்னீறில் பெரும் புகழே
      தெருளும் தெருள் தந்து * இராமானுசன் செய்யும் சேமங்களே.

விளக்கவுரை – எனது உள்ளமே! நாம் செய்வது என்ன? மிகையான செல்வம், புத்திரர்கள், வசிப்பதற்குச் சிறந்த நிலம், மலர்கள் அலங்கரித்த மனைவி ஆகியவற்றை மட்டுமே விரும்பியபடி உள்ளோம். இவற்றையே மிகவும் உயர்ந்த பொருள்கள் என்று உணவையும் மறந்து, இளைத்து நிற்கிறோம் (இங்கு உணவு என்பது உண்ணும் உணவு, ஞானம் ஆகிய இரண்டையுமே குறிக்கும்). இதனைத் திருமங்கையாழ்வார் – தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும் நோயே பட்டொழிந்தேன் – என்றார் அல்லவோ? இப்படிப்பட்ட அஜ்ஞானம் மூலம் நமக்கு ஏற்படும் கொடூரமான துயரங்கள் அனைத்தையும் நீக்கி, தன்னுடைய மேன்மேலும் எல்லையற்றுப் பெருகியபடி உள்ள திருக்கல்யாண குணங்களை நமக்கு வெளிப்படுத்தியபடி உள்ளவர் எம்பெருமானார் ஆவார். இவர் நமக்காகச் செய்யும் ரக்ஷணங்கள் (நம்மைக் காப்பாற்றும் செயல்கள்) மற்றவர்களால் செய்யவும் இயலுமோ? அந்தக் கண்ணன் கூட – தூது செல்வது, தேர் ஓட்டுவது, கீதை உபதேசம் செய்வது – போன்ற பலவற்றையும் பாண்டவர்களுக்குகாக மட்டுமே, குறிப்பாக அவர்களில் ஒருவனான அர்ஜுனனுக்காக மட்டுமே செய்தான் அல்லவோ? ஆனால் எம்பெருமானார் அனைவருக்கும், அனைத்தையும் உபதேசித்தார் அன்றோ? ஆக இவர் போன்று நமக்கு அந்த மாயக்கண்ணனாலும் உதவ இயலவில்லை என்பது உண்மைதானே! இப்படி உள்ளபோது பொருள், புத்திரர்கள், மனைவி போன்றவையா நம்மைக் காக்கும் – என்று கருத்து.

40. சேமநல் வீடும் பொருளும் தருமமும் * சீரியநற்
       காமமும் என்றிவை நான்கு என்பர் * நான்கினும் கண்ணனுக்கே
       ஆமது காமம் அறம் பொருள் வீடு இதற்கென்று உரைத்தான்
       வாமனன் சீலன் * இராமானுசன் இந்த மண் மிசையே.

விளக்கவுரை – மோக்ஷம் என்பதும், அயோத்யை மற்றும் அபராஜிதா என்றும் கூறப்படும் பரமபதம்; இத்தகைய மோக்ஷம் கிட்ட இயற்றும் செயல்களுக்குத் தேவையான பொருள்; இத்தகைய மோக்ஷம் என்பதற்கு உறுப்பாக உள்ள கர்மங்கள் என்னும் தர்மம்; சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டபடி உள்ள காமம் – இப்படிப்பட்ட நான்கையே புருஷார்த்தம் என்று சாஸ்திரம் அறிந்தவர்கள் கூறுவார்கள். இந்த நான்கிலும் எம்பெருமானிடத்தில் கொள்ளும் காமம் என்பதே மிகவும் உயர்ந்த, முதன்மையான புருஷார்த்தம் ஆகும். அவனுடைய திருமுகம் நமது கைங்கர்யம் கண்டு மகிழ்வதற்கு அடிப்படையாக உள்ள நமது கர்மங்களே புருஷார்த்தம் ஆகும். ஆக க்ருஷ்ண காமமே ப்ரதானமாக நம்மிடம் இருக்க வேண்டும். மற்ற மூன்று புருஷார்த்தங்களாகிய அறம் (தர்மம்), பொருள் (தனம்) மற்றும் வீடு (தர்மம் மற்றும் தனம் ஆகியவற்றுக்கு ஏற்ற இடம்) ஆகிய மூன்றும் க்ருஷ்ண காமத்திற்கு அடிமைகளே என்று உரைத்தார் – யார்? வாமனனாக வந்து வசிஷ்டர் போன்ற உயர்ந்தவர்கள் தொடங்கி சண்டாளர்கள் வரை உள்ள அத்தனை மனிதர்கள், விலங்குகள் ஆகியவற்றின் தலைகளில், வேறுபாடு காணாமல், தனது திருவடிகளை வைத்து அருளிய த்ரிவிக்ரமன் போன்று – இந்த உலகத்தாரில் ஏற்றத்தாழ்வு பாராமல், அனைவருக்கும் உபதேசித்த எம்பெருமானார் ஆவார்.

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: