jump to navigation

26. இராமானுச நூற்றந்தாதி(பாசுரங்கள் 51-52) February 23, 2008

Posted by sridharan in இராமானுச100அந்தாதி.
trackback
51. அடியைத் தொடர்ந்து எழும் ஐவர்கட்காய் * அன்று பாரதப் போர்
      முடியப் பரிநெடும் தேர்விடும் கோனை * முழுது உணர்ந்த
      அடியர்க்கமுதம் இராமானுசன் என்னை ஆள வந்து இப்
       படியில் பிறந்தது * மற்றில்லை காரணம் பார்த்திடிலே.

விளக்கவுரை – சிறு வயது முதலேயே வ்யாஸபகவான், குந்தி, மார்க்கண்டேயன் ஆகியவர்கள் கூறி வந்த அறிவுரைகளைக் கேட்டுவந்த பாண்டவர்கள் செய்தது என்னவென்றால் – தங்களுக்கு ஆபத்து வந்தபோது உதவி செய்தபடி இருந்த கண்ணனை, சாதாரண மனிதன் என்று எண்ணாமல், தங்களைக் காப்பாற்றும் பரம்பொருள் என்றே கொண்டனர். அவனது திருவடிகளை மட்டுமே பற்றியபடி ருத்ரன், இந்திரன் ஆகியவர்களை வென்று, இந்த உலகில் தங்களுக்கு யாரும் நிகரில்லை என்றபடி பாண்டவர்கள் இருந்தனர். இவர்கள் ஒரு காலகட்டத்தில் துரியோதனன், கர்ணன், சல்லியன் போன்ற தீயவர்கள் அனைவராலும் தனிமைப்படுத்தப் பட்டபோது, தன்னை அல்லாமல் வேறு கதி இன்றி நிற்பதைக் க்ருஷ்ணன் கண்டான். அப்போது நிகழ்ந்த மஹாபாரத யுத்தம் பாண்டவர்களுக்குச் சாதகமாக முடியும் விதமாக, தனது ஸ்வாமித்வம் அனைவருக்கும் தெரியும்படி, உயர்ந்த தேரில் தானே சாரதியாக அமர்ந்தான். இந்தக் கண்ணனை – அவனது ஸ்வரூபம், ரூபம் ஆகியவற்றுடன் சேர்த்து உணர்ந்தவர்கள் ஆழ்வான், ஆண்டான்பிள்ளான், எம்பார் போன்றவர்கள் ஆவர். இவனது தன்மை எப்படிப்பட்டது என்றால் – தந்தை வசுதேவன் சொல் கேட்டு, நான்கு திருக்கரங்களை மறைத்து, இயல்பான தோற்றம் எடுத்தான்; யமுனை நதி முழுவதையும் தனது திருவடிகளால் தூய்மைப்படுத்தினான்; ஆய்ச்சி கைகளால் உரலில் கட்டுண்ண்டு நின்று அடி வாங்கினான்; பூதனை, சகடன், அரிஷ்டன், ப்ரலம்பன், தேநுகன், காளியன், கேசி, குவலயாபீடம், சாணூரன், கௌஸலன், கம்சன் ஆகிய விரோதிகளை அழித்தான்; அக்ரூரர் போன்றவர்களுக்கு அனுக்ரஹம் செய்தான்; கோவர்த்தன மலை எடுத்தல் போன்ற வியப்பான செயல்களைச் செய்தான்; பாண்டவர்களுக்காக சமாதான ஓலையை எடுத்துக்கொண்டு தூது சென்றான்; சாரதியாக அமர்ந்து விச்வரூபம் எடுத்தான்; அர்ஜுனனிடம் உயர்ந்த சாஸ்திரத்தை வெளியிட்டான் – இப்படிப்பட்ட இவனது உயர்ந்த திருக்கல்யாண குணங்களில் பலரும் தோற்று, தங்களை அவனுக்கு அடிமை என்று எழுதிக் கொடுத்தனர். இப்படிப்பட்டவர்களுக்கு அமிர்தம் போன்று உள்ளவர் எம்பெருமானார் ஆவார். இப்படிப்பட்ட யதிராஜர், என்னைத் தனது அடிமை என்று கொள்வதற்காகவே இந்தப் பூமியில் திருஅவதாரம் செய்தார். இதனைத் தவிர இவரது அவதாரத்திற்கு வேறு காரணம் இல்லை.

52. பார்த்தான் அறுசமயங்கள் பதைப்ப * இப்பார் முழுதும்
      போர்த்தான் புகழ் கொண்டு புன்மையினேன் இடைத்தான் புகுந்து *
      தீர்த்தான் இருவினை தீர்த்து அரங்கன் செய்ய தாள் இணையோடு
      ஆர்த்தான் * இவை எம் இராமானுசன் செய்யும் அற்புதமே.

விளக்கவுரை – பௌத்தம், சார்வாகம், சாக்கியம், உலூக்கியம், பாசுபதம் மற்றும் காணாபத்யம் ஆகிய ஆறு பிரிவுகளும் அழியும்படிப் பார்த்தார். இவ்விதம் செய்தது மூலம், இந்த உலகில் உள்ள பண்டிதர்கள் முதல் பாமர மக்கள் வரை உள்ள அனைவரும் போற்றும்படி தனது புகழ் அனைத்துத் திசைகளிலும் பரவும்படி விளங்கினார். அன்றாடம் செய்யும் பாவங்களே ஒரு வடிவு எடுத்து நிற்பது போன்ற என்னுடைய மனதில் புகுந்தார். இதன் மூலம் எத்தனை ப்ராயச்சித்தம் செய்தாலும் தீர்க்க இயலாத எனது வினைகள் மற்றும் பாவங்களைத் தீர்த்து வைத்தார். இவ்விதம் எனது பாவங்களை நீக்கிய பின்னர், “எளிதில் அடைய இயலாத பரமபதம் சென்று நிலைப்பாய்”, “யோக மார்க்கத்தில் ஈடுபடுவாய்”, என்றெல்லாம் கடினமான செயல்களை எனக்கு உபதேசிக்கவில்லை. மாறாக, நான் இருந்த உலகில் உள்ள பெரியபெருமாளான திருவரங்கனின் திருவடிகளுடன் எனக்குத் தொடர்பு ஏற்படுத்தினார். இவை அனைத்தும், என் போன்ற பாவம் நிறைந்தவர்களுக்காகவே அவதரித்த எம்பெருமானார் செய்யும் அற்புதங்கள் ஆகும்.

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: