jump to navigation

30. இராமானுச நூற்றந்தாதி(பாசுரங்கள் 59-60) February 27, 2008

Posted by sridharan in இராமானுச100அந்தாதி.
trackback
59. கடல்  அளவாய  திசை  எட்டின்  உள்ளும் * கலி  இருளே
       மிடை  தரு  காலந்து  இராமானுசன் * மிக்க  நான்மறையின்
       சுடர்  ஒளியால்  அவ்விருளைத்  துரந்திலனேல்  உயிரை 
       உடையவன் * நாரணன்  என்று  அறிவாரில்லை  உணர்ந்தே.

விளக்கவுரை – கடல் சூழ்ந்த எட்டுத் திசைகளும் கொண்ட இந்தப் பூமி முழுவதும், கலி புருஷன் தனது ஸ்வபாவம் மூலம் உலகில் உள்ள அனைவருக்கும் அஜ்ஞானம் என்ற இருளை உண்டாக்கினான். இதனால் தர்ம மார்க்கத்தை யாரும் எளிதில் காணாதபடி செய்தான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பரமபதத்தில் இருந்து இந்த உலகில் எம்பெருமானார் திருஅவதாரம் செய்தார். ஸர்வேச்வரனின் ஸ்வரூபம் மற்றும் ரூபங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய நான்கு வேதங்கள் என்ற கொழுந்து விட்டு எரியும் ஒளி கொண்டு, கலிபுருஷனால் உண்டாக்கப்பட்ட அஜ்ஞானம் என்னும் இருளை நீக்கினார். இவ்விதமாக எம்பெருமானார் செய்யவில்லை என்றால் என்ன நிகழ்ந்திருக்கும்? இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் எஜமானனாக நாராயணனே உள்ளான் என்று மிகவும் தெளிவாக ஆராய்ந்து அறிபவர்கள் யாரும் இல்லை என்ற அவலநிலை உண்டாகியிருக்கும்.

60. உணர்ந்த  மெய்ஞ்ஞாநியர்  யோகந்தொறும் * திருவாய்மொழியின்
       மணம்  தரும்  இன்னிசை  மன்னும்  இடந்தொறும் * மாமலராள்
       புணர்ந்த  பொன்மார்வன்  பொருந்தும்  பதிதொறும்  புக்கு  நிற்கும்
       குணம்  திகழ்  கொண்டல் * இராமானுசன்  எங்குலக்  கொழுந்தே. 

விளக்கவுரை – இங்கு உணர்வு என்பது பக்தியைக் குறிக்கும். பக்தி என்பது ஸ்ரீமந் நாராயணனே அனைத்திற்கும் எஜமானன் என்று அறிந்து, அவன் அனைத்து திருக்கல்யாண குணங்களும் கொண்டவன் என்று உணர்ந்து, அவன் ஆனந்தமயமாக உள்ளவன் என்று தெளிந்து அவனைப் போற்றும் தன்மையாகும். இப்படிப்பட்ட தன்மையில் தங்களை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டவர்கள் ஆழ்வார்கள் ஆவர். ஆக – உணர்ந்த மெய்ஜ்ஞானியர் – என்பது ஆழ்வார்களைக் குறிக்கும். இப்படிப்பட்ட ஆழ்வார்கள் கூட்டத்தில் எப்போதும் உள்ளவர்; ஆழ்வார்களில் ப்ரதானமாக உள்ள நம்மாழ்வார் அருளிச் செய்த தமிழ் வேதமாகிய திருவாய்மொழியானது, தனது இசை என்னும் நறுமணத்தை எங்கெல்லாம் பரப்பியபடி உள்ளதோ, அங்கெல்லாம் உள்ளவர்; தாமரை மலரில் அமர்ந்த மஹாலக்ஷ்மி மிகவும் விரும்பி ஆரத்தழுவுகின்ற திருமார்பைக் கொண்டவனாகிய ஸ்ரீமந் நாராயணன் மிகவும் உகந்து எழுந்தருளியுள்ள திவ்யதேசங்களில் பொதிந்து நிற்பவர் – இவற்றுள் தானாகவே கானகத்தில் வந்து வழிகாட்டி சேர்த்துவிட்ட காஞ்சீபுரம், பெரியபெருமாளின் ஆணையின் பேரில் வந்து அருளிய திருவரங்கம், சைவர்களின் பிடியில் இருந்து காப்பாற்றிய திருமலை, வேதங்களை ஏற்காத மதங்களை வாதம் செய்து வீழ்த்திய திருநாராயணபுரம், நம்மாழ்வார் அவதரித்த ஆழ்வார்திருநகரி, ஆண்டாளின் விருப்பத்தை நிறைவேற்றிய திருமாலிருஞ்சோலை – ஆகியவை முக்கியமானவை – இப்படியாக பல இடங்களிலும் மிகவும் ப்ரியம் கொண்டு ஈடுபட்டு எம்பெருமானார் காணப்படுவார். இவ்விதம் பக்தி என்ற குணமே இவரிடம் சென்று மேலும் மேன்மை பெற்றது என்னும்படியாக உள்ள எம்பெருமானார், எங்களது வைணவ குலம் தழைக்க வந்த கொழுந்து ஆவார். வேருக்கு அதிக வெப்பம் ஏற்பட்டால் அதனை உணர்ந்த கொழுந்துப்பகுதி வாடுவது போன்று, எங்கள் வைணவ குலத்திற்கு ஏதேனும் நேர்ந்தால், தனது முகம் வாடும் தன்மை கொண்டவர் என்று கருத்து.

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: