jump to navigation

பெரிய கோயில் ஊஞ்சல் – 8 – நிறைவுப் பகுதி October 24, 2008

Posted by sridharan in oonjal.
3 comments

29. முருகன் உறை குறிஞ்சித் தேன் முல்லை பாய

முல்லை நிலத் தயிர் பால் நெய் மருதத்தோட

மருத நிலக் கொழும்பாகு நெய்தல் தேங்க

வரு புனல் காவிரி சூழ்ந்த வளத்தைப் பாடக்

கருமணியே மரகதமே முத்தே பொன்னே

கண்மணியே ஆருயிரே கனியே தேனே

அருள் புரிவாய் என்றவர் தம் அகத்துள் வைகும்

அணி அரங்க மாளிகையார் ஆடிர் ஊசல்.

பொருள் – முருகன் உறைகின்ற குறிஞ்சி நிலத்தின் கருப்பொருளாகிய தேன் முல்லை நிலம் எங்கும் பாய்ந்தபடி உள்ளது. முல்லை நிலத்தின் கருப்பொருளாகிய தயிர், பால், நெய் முதலானவை மருத நிலம் எங்கும் ஓடுகின்றது; மருத நிலத்தின் விளை பொருளாகிய கரும்புச்சாறின் வெல்லப்பாகு நெய்தல் நிலம் எங்கும் ஓடுகிறது; இப்படியாக வளமாக உள்ள காவேரி சூழ்ந்த நீரைக் கொண்ட திருவரங்கத்தின் வளத்தைப் பாடியபடி உள்ளனர். ஊஞ்சல் மண்டபத்தில் பலரும், “நீலமணி போன்றவனே! பச்சை நிறம் கொண்டவனே! முத்து போன்று ப்ரகாசிப்பவனே! தங்கம் போன்று அருமையானவனே! கண்ணில் உள்ள கருமணியே! இனிமையாக உள்ள கனி போன்றவனே! தேன் போன்று நினைத்தாலே இனிப்பவனே! கருணையைப் பொழிவாயாக”, என்று எண்ணியபடி உள்ளனர். இவர்களின் மனதில் புகுந்து தங்குகின்ற, அழகான திருவரங்கத்தில் உறைபவனே! ஸ்ரீரங்கநாதா! ஊஞ்சல் ஆடுவாயாக!

30. புண்டரிகத்தவன் தவம் செய்து இறைஞ்சும் கோயில்

புரிசடையோன் புராணம் செய்து ஏத்தும் கோயில்

பண்டு இரவி குலத்து அரசர் பணிந்த கோயில்

பரிந்து இலங்கை கோன் கொணர்ந்து பதித்த கோயில்

மண்டபமும் கோபுரமும் மதிலும் செம்பொன்

மாளிகையும் தண்டலையும் மலிந்த கோயில்

அண்டர் தொழும் திருவரங்கம் பெரியகோயில்

அமர்ந்து உறையும் பெருமானார் ஆடிர் ஊசல்.

பொருள் – ஸ்ரீரங்கநாதா! உன்னுடைய திருநாபியில் உள்ள தாமரையில் தோன்றிய நான்முகன் தவம் செய்து உண்டாக்கி, ஆராதனம் செய்யும் கோயில்; முறுக்கிவிட்ட சடை முடியுடன் கூடிய சிவன் ஸ்ரீரங்க மாஹாத்ம்யம் கொண்டு புகழ்ந்து ஏத்தும் கோயில்; முன்பு சூரிய வம்சத்தில் வந்த அரசர்கள் பணிந்து நின்ற கோயில்; இலங்கையின் அரசனாகிய விபீஷணன் மிகவும் விரும்பி கொண்டு வந்து நிலை நிறுத்திய கோயில்; மண்டபங்கள், கோபுரங்கள், உயர்ந்த நீண்ட மதில் சுவர்கள், பொன்னால் வேயப்பட்ட மாளிகைகள், அழகான சோலைகள் சூழ்ந்துள்ள கோயில்; இந்த அண்டத்தில் உள்ள அனைவரும் தொழுதபடி நிற்கும் கோயில் – இத்தகைய திருவரங்கம் பெரியகோயிலில் சயனித்துள்ள பெரியபெருமாளே! ஊஞ்சல் ஆடுவாயாக!

31. அரு வரங்கள் தரு பராங்குசனே ஆதி

ஆழ்வார்கள் தம்பிரான் ஆடிர் ஊசல்

இருவர் அங்கம் ஒளிக்கு அகலா இருட்டு அகற்றும்

எதிராசன் தம்பிரான் ஆடிர் ஊசல்

தரு வரங்கள் நீள் பொழில் கூரத்து வேத

ஆசாரியனார் தம்பிரான் ஆடிர் ஊசல்

திருவரங்கத்து அணி அரங்கன் திருமுற்றத்துத்

தெய்வங்கள் தம்பிரான் ஆடிர் ஊசல்.

பொருள் – தன்னை அண்டிய அடியார்களுக்கு உயர்ந்த வரங்கள் பல அளிக்கின்ற நம்மாழ்வார் முதலா ஆழ்வார்களின் தலைவனே! ஊஞ்சல் ஆடுவாயாக! சூரியன், சந்திரன் என்னும் இருவரின் உடலில் இருந்து வெளிப்படும் ப்ரகாசமான ஒளி பட்டாலும் நீங்காத அறியாமை என்னும் இருளை துரத்தவல்ல எம்பெருமானாரின் தலைவனே! ஊஞ்சல் ஆடுவாயாக! சிறந்த மரங்கள் ஓங்கி நிற்கின்ற சோலைகளால் சூழப்பட்ட கூரம் என்னும் தேசத்தில் அவதரித்த வேதங்களில் சிறந்தவரான கூரத்தாழ்வானின் தலைவனே! ஊஞ்சல் ஆடுவாயாக! திருவரங்கன் பெரியகோயிலில் உள்ள திருவரங்கன் திருமுற்றம் என்ற இடத்தில் வந்து தொழுகின்ற தேவதைகளின் தலைவனே! ஊஞ்சல் ஆடுவாயாக!

32. உணராத மதலை இளங்குதலைச் சொல்லை

உளம் உருகித் தந்தை தாய் உவக்குமாபோல்

தணவாமல் கற்பிப்பார் தம் சொல் கேட்டுத்

தத்தை உரைத்தத்தை ஆதரிக்குமா போல்

பணம் வாள் அரா முடிமேல் படி ஏழ் போற்றும்

பட்டர் திருத்தாட்கு அடிமைப்பட்ட காதல்

மணவாளதாசன் தன் புன்சொல் கொண்ட

மதில் அரங்கமணவாளர் ஆடிர் ஊசல்.

பொருள் – நன்றாகப் பேசத் தெரியாத சிறிய குழந்தையின் மழலை முற்றாத சொற்களைக் கேட்கும் தாய்-தந்தை மகிழ்வது போன்றும்; இடைவிடாமல் கல்வியைப் போதிப்பவர்கள், தங்களது சொல்லைக் கேட்ட கிளி அப்படியே பேசுவதை விரும்பு மகிழ்வது போன்றும் எனது சொற்களை ஏற்றாய். ஒளிவீசும் படங்களுடன் கூடிய ஆதிசேஷன் மீது உள்ள ஏழு உலகத்தில் உள்ளவர்களால் போற்றப்படும் ஸ்வாமி பராசரபட்டரின் திருவடிகள் மீது மிகுந்த அன்பு கொண்ட அழகியமணவாளதாசன் என்னும் என்னுடைய தாழ்ந்த சொற்களையும் ஏற்றுக் கொண்டவனே! மதில்களால் சூழப்பட்ட திருவரங்கப் பெரியகோயிலில் சயனிக்கும் அழகியமணவாளா! ஊஞ்சல் ஆடுவாயாக!

நிறைவுப் பாட்டு

போது ஆரும் நான்முகனே முதலாய் உள்ள

புத்தேளிர் தொழுநாதன் புவனிக்கு எல்லாம்

ஆதாரமாம் தெய்வம் ஆன நாதன்

அனைத்து உயிர்க்கு நாதன் அணி அரங்கநாதன்

சீத அரவிந்த மலர்த் திருவின் நாதன்

திரு ஊசல் திருநாமம் ஒரு நால் எட்டும்

வேத ஆசாரிய பட்டர்க்கு அடிமையான

வெண்மணிப் பிள்ளைப்பெருமாள் விளம்பினானே.

பொருள் – தாமரையில் வாழ்கின்ற நான்முகன் முதலான அனைத்து தேவர்களும் போற்றும் ஸ்ரீரங்கநாதன்; அனைத்து உலகங்களுக்கும் ஆதாரமான தெய்வமாக உள்ள ஸ்ரீரங்கநாதன்; அனைத்து உயிர்களின் நாதனாக உள்ள ஸ்ரீரங்கநாதன்; குளிர்ந்த தாமரை மலரில் வீற்றுள்ள ஸ்ரீரங்கநாச்சியாரின் நாதன் – இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதனைக் குறித்து, வேதங்களில் சிறந்த ஆசாரியரான ஸ்வாமி பராசரபட்டரின் அடிமையான பிள்ளைப்பெருமாள் ஐயங்கார், இப்படியாக முப்பத்து இரண்டு ஊஞ்சல் பாடல்கள் அருளிச்செய்தார்.

ஸ்வாமி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் அருளிச்செய்த

ஸ்ரீரங்கநாயகர் ஊசல் ஸம்பூர்ணம்

ஊஞ்சல் கண்டருளிய நம்பெருமாள் திருவடிகளே தஞ்சம்

ஸ்வாமி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் திருவடிகளே தஞ்சம்

Advertisements

பெரிய கோயில் ஊஞ்சல் – 7 October 23, 2008

Posted by sridharan in oonjal.
add a comment

25. ஆரணங்கள் ஒரு நான்கும் அன்பர் நெஞ்சும்

அணி சிலம்பும் அடி விடாது ஊசல் ஆட

வார் அணங்கு முலை மடவார் கண்ணும் வண்டும்

வள் துளவும் புயம் விடாது ஊசல் ஆடக்

காரணங்கள் ஆய் அண்டர் அண்டம் எல்லாம்

கமலநாபியில் படைத்து காத்து அழிக்கும்

சீர் அணங்கு மணவாளர் ஆடிர் ஊசல்

சீரங்கநாயகனார் ஆடிர் ஊசல்.

பொருள் – ஸ்ரீரங்கநாதனே! நீ ஊஞ்சல் ஆடும்போது நான்கு வேதங்கள், அடியார்களின் மனம் மற்றும் உனது அழகான சிலம்புகள் ஆகிய பலவும் உனது திருவடிகளை விடாமல் ஆடுகின்றன. நன்கு கட்டப்பட்ட கச்சம் உடைய ஸ்தனங்கள் கொண்ட பெண்களின் கண்கள், வண்டுகள், சிறந்த துளசி மாலை ஆகிய அனைத்தும் உனது அழகான திருத்தோள்களை விடாமல் ஆடுகின்றன. மூன்று வகையான காரணங்கள் ஆகி (நிமித்த காரணம், உபாதாநக் காரணம், ஸஹகாரி காரணம் : பானைக்கு உபாதானக் காரணம் = மண்; நிமித்த காரணம் = குயவன்; ஸஹகாரி காரணம் = சக்கரம்), அண்டத்தில் இருப்பவர்கள் மற்றும் அனைத்து அண்டம் ஆகியவற்றைத் திருநாபியில் படைத்து, காத்து, ப்ரளயத்தின்போது உள்ளே இழுக்கின்ற, சிறப்புடைய பெண்ணாகிய ஸ்ரீரங்கநாச்சியாரின் நாயகனே! ஊஞ்சல் ஆடுவாயாக! அழகிய மணவாளனே! ஊஞ்சல் ஆடுவாயாக.

26. அடித்தலத்தில் பரி புரமும் சிலம்பும் ஆட

அணி மார்பில் கௌத்துவமும் திருவும் ஆடத்

தொடித்தலத்தில் மணிமடமும் துளவும் ஆடத்

துணை கரத்தில் சக்கரமும் சங்கும் ஆடத்

முடித்தலத்தில் கருங்குழலும் சுறும்பும் ஆடத்

முகமதியில் குறு வேர்வும் குழையும் ஆடக்

கடித்தலத்தில் அரைநாணும் கலையும் ஆடக்

காவேரி சூழ் அரங்கேசர் ஆடிர் ஊசல்.

பொருள் – காவேரியால் சூழப்பட்ட திருவரங்கத்தில் பள்ளிகொண்ட பெரியபெருமாளே! உனது திருவடிகளில் கிங்கிணிகள், தண்டைகள் ஆடுகின்றன; அழகான திருமார்பில் கௌஸ்துபமும், ஸ்ரீரங்கநாச்சியாரும் ஆடியபடி உள்ளனர்; திருத்தோள்களில் இரத்தின மாலையும் துளசி மாலையும் ஆடுகின்றன; இரண்டு திருக்கரங்களில் சக்கரமும் சங்கும் ஆடுகின்றன; அழகான திருமுடியில் உள்ள தலைமுடியும், அங்கு உள்ள மலர்களை மொய்க்கின்ற வண்டுகளும் ஆடுகின்றன; முழுநிலவு போன்ற திருமுகத்தில் வியர்வைத் துளிகளும், காதணிகளும் ஆடுகின்றன; அழகான இடுப்பில் அரைநாண் கயிறும் திருப்பரி வட்டமும் ஆடுகின்றன. திருவரங்கனே! இப்படியாக நீ ஊஞ்சல் ஆடுவாயாக!

27. பரந்து அலைக்கும் பாற்கடலுள் பசு சூல் கொண்டல்

படிந்தது எனக் கிடந்தபடி படிமேல் காட்டி

வரம் தழைக்க இரண்டு ஆற்றின் நடுவே தோன்றி

மண்ணுலகை வாழ வைத்த வளத்தைப் பாடத்

புரந்தரற்கும் பெருமாளே ஆடிர் ஊசல்

போதனுக்கும் பெருமாளே ஆடிர் ஊசல்

அரன் தனக்கு பெருமாளே ஆடிர் ஊசல்

அணி அரங்கப் பெருமாளே ஆடிர் ஊசல்.

பொருள் – ஓங்கி வீசுகின்ற அலைகள் கொண்ட திருப்பாற்கடலில், நீர் கொண்ட கரிய மேகம் கிடந்ததோ என்று எண்ணும்படி விளங்குகின்ற சயன திருக்கோலத்தை, இங்கு நாங்கள் கண்களால் காணும்படிக் காட்டுகின்றாய். இப்படியாக அடியார்களுக்கு அவர்கள் வேண்டிய வரங்களை அளிப்பதாக, காவேரி மற்றும் கொள்ளிடம் ஆகிய இரண்டின் நடுவில் வந்து தோன்றினாய். இப்படியாக உலகில் உள்ளவர்கள் வாழும்படியாகச் செய்த உனது பெருமையைப் பாடியபடி உள்ளனர். இந்திரனின் தலைவனே! ஊஞ்சல் ஆடுவாயாக! நான்முகனின் தலைவனே! ஊஞ்சல் ஆடுவாயாக! சிவனின் தலைவனே! ஊஞ்சல் ஆடுவாயாக! ஸ்ரீரங்கநாதனே! ஊஞ்சல் ஆடுவாயாக!

28. உடு மாயக் கதிர் உதிரச் சண்ட வாயு

உலகு அலைப்ப வடவை சுட உததி ஏழும்

கெடும் ஆறும் திரிதரு கால் உயிர்கள் எல்லாம்

கெடாது வயிற்றுள் இருத்தும் கீர்த்தி பாட

நெடு மாயம் பிறவி எல்லாம் பிறந்து இறந்து

நிலத்தோடும் விசும்போடும் நிரயத்தோடும்

தடுமாறி திரிவேனை அருள் செய்து ஆண்ட

தண் அரங்க நாயகனார் ஆடிர் ஊசல்.

பொருள் – நட்சத்திரங்கள் அழிகின்றன; சூரியனும், சந்திரனும் உதிர்கின்றன; ப்ரஸண்ட மாருதம் என்னும் காற்று வீசி உலகங்களை அழிக்கின்றது; வடவாமுக அக்னி என்னும் நெருப்பு அனைத்தையும் அழிக்கின்றது; அனைத்து அண்டங்களும் முழுகும்படி ஏழு கடல்களும் பொங்கிப் பரவுகின்றன. இப்படியாக உள்ள ப்ரளய காலத்தில் அனைத்து உயிர்களும் அழியாதபடி அவற்றை உனது திருவயிற்றில் வைத்துப் பாதுகாக்கும் கீர்த்தியைப் பாடியபடி உள்ளனர். நீண்ட மாயை சூழ்ந்த பல பிறவிகளில், இறந்தும் பிறந்தும், விண்ணுலகத்திலும் நரகத்திலும் தடுமாறி நான் திரிந்தேன். என் மீது கருணை கொண்டு, என்னை உன்னுடையவன் என்று ஆக்கிக்கொண்ட, குளிர்ந்த ஸ்ரீரங்கத்தில் உள்ள நம்பெருமாளே! நீ ஊஞ்சல் ஆடுவாயாக!

…..நாளை தொடரும்….

பெரிய கோயில் ஊஞ்சல் – 6 October 22, 2008

Posted by sridharan in oonjal.
add a comment

21. சந்து ஆடும் பொழில் பூதூர் முக்கோல் செல்வன்

தன் மருமகன் ஆகி இரு தாளும் ஆன

கந்தாடைக் குல தீபன் முதலியாண்டான்

கடல் ஞாலம் திருத்தி அருள் கருணை பாடக்

கொந்து ஆரும் துளவு ஆடச் சிறை வண்டு ஆடக்

குழல் ஆட விழி ஆடக் குழைக் காது ஆட

நந்து ஆடக் கதை ஆடத் திகிரி ஆட

நன்மாடத் திருவரங்கர் ஆடிர் ஊசல்.

பொருள் – அழகான சோலைகள் சூழ்ந்த ஸ்ரீபெரும்பூதூரில் அவதரித்தவரும், த்ரிதண்டம் ஏந்தியவரும் ஆகிய உடையவரின் – மருமகனும், இரண்டு திருவடிகள் என்று போற்றப்படுபவரும், கந்தாடைக் குலத்தின் விளக்குப் போன்றவரும் உள்ளவர் முதலியாண்டான் ஆவார். கடலால் சூழப்பட்ட இந்த உலகத்தில் உள்ளவர்களை நெறிப்படுத்தி அருளிய முதலியாண்டானின் பெருமைகளை ஊஞ்சல் மண்டபத்தில் உள்ளவர்கள் பாடியபடி உள்ளனர். திருவரங்கனே! கொத்தாக கட்டப்பட்ட உனது துளசிமாலை அசைந்தபடி உள்ளது; அந்த மாலையில் மொய்க்கின்ற அழகான சிறகுகளைக் கொண்ட வண்டுகள் அசைந்தபடி உள்ளன; திருக்கண்கள் நான்கு புறமும் பார்த்தபடி அசைகின்றன; அழகான குண்டலங்கள் அணிந்த திருக்காதுகள் அசைகின்றன; இடது திருக்கரத்தில் உள்ள சங்கு அசைகின்றது; இடது திருக்கரம் அழுத்தியுள்ள கதை அசைகிறது; வலது திருக்கரத்தில் உள்ள சக்கரம் அசைகிறது. உயர்ந்த மாடமாளிகைகள் நிறைந்துள்ள திருவரங்கத்தில் உள்ள ஸ்ரீரங்கநாதா! ஊஞ்சல் ஆடுவாயாக.

22. திருக்கலியன் அணுக்கர் திருப்பணி செய் அன்பர்

சீரங்க நான்மறையோர் உள்ளூர்ச் செல்வர்

தருக்கும் இசைப்பிரான்மார் பார் அளந்தார் பாதம்

தாங்குவோர் திருக்கரகம் தரித்து நிற்போர்

இருக்கு முதல் விண்ணப்பம் செய்வோர் வீரர்க்கு

இறையவர்கள் சீபுண்டரீகர் மற்றும்

பெருக்கமுள்ள பரிகரங்கள் தொழுது ஆட்செய்யப்

பிரமமாம் திருவரங்கர் ஆடிர் ஊசல்.

பொருள் – மணியக்காரர் முதலான கைங்கர்யபரர்கள், நீர் தெளித்தல் முதலான கைங்கர்யம் செய்பவர்கள், வேதங்கள் ஓதுவோர், திருவரங்கத்தைச் சேர்ந்த ”நம்பெருமாள்” என்னும் செல்வம் உள்ள மக்கள், இசைப்பதில் சிறந்தவர்கள், உலகம் அளந்த எம்பெருமானின் திருவடிகளைத் தாங்கும் ஸ்ரீபாதம்தாங்குவோர், பரிசாரகம் முதலானோர், ரிக் வேதம் முதலான விண்ணப்பம் செய்வோர், எம்பெருமானுக்குக் காவலாக வாளும் வேலும் கொண்டவர்கள், பந்தம் பிடிப்பவர்கள் மற்றும் வேறு பலவிதமான கைங்கர்யம் செய்யும் பலரும் உன்னைத் தொழுது, உனக்கே கைங்கர்யங்களைச் செய்தபடி உள்ளனர். இப்படியாக உள்ள பரப்ரஹ்மமே! திருவரங்கா! ஊஞ்சல் ஆடுவாயாக!

23. உடு திரளோ வானவர்கள் சொரிந்த பூவோ

உதித்து எழுந்த கலைமதியோ உம்பர் மாதர்

எடுத்திடு கர்ப்பூர ஆரத்திதானோ

யாம் தெளியோம் இன்று நீள் திருக்கண் சாத்திப்

படுத்த திருப்பாற்கடலுள் நின்று போந்து

பாமாலை பூமாலை பாடிச் சூடிக்

கொடுத்த திருக்கோதையுடன் ஆடிர் ஊசல்

கோயில் மணவாளர் ஆடிர் ஊசல்.

பொருள் – விண்ணில் இருந்து உதிர்ந்த நக்ஷத்ரங்களா? உன்னைத் தொழுகின்ற தேவர்கள் அன்புடன் தூவும் மலர்களா? மாலையில் உதித்த கலைகளுடன் கூடிய நிலவா? அல்லது தேவலோகப் பெண்கள் எடுத்த கர்ப்பூர ஆரத்தியா? எங்களுக்கு இங்கு உண்டாகும் ஒளி எதனால் என்று தெரியவில்லையே! நீண்ட திருக்கண்கள் மூடியபடி சயனிக்க ஏற்ற இடம் இதுவே என்று, திருப்பாற்கடலில் இருந்து வந்தவனே! பாமாலையும், பூமாலையும் சூடிக் கொடுத்த ஆண்டாளுடன் சேர்ந்து நீ ஊஞ்சல் ஆடுவாயாக! பெரியகோயிலில் விளங்கும் அழகியமணவாளா! ஊஞ்சல் ஆடுவாயாக!

24. வென்றி வேல் கரு நெடுங்கண் அசோதை முன்னம்

வேர்வு ஆட விளையாடும் வெண்ணெய் ஆட்டும்

குன்று போல் நால் தடந்தோள் வீசி ஆடும்

குரவைதனைப் பிணைந்தாடும் கோள் அறு ஆட்டும்

மன்றின் ஊடு உவந்து ஆடும் மரக்கால் ஆட்டும்

வலி அரவில் பாய்ந்தாடும் வடுவில் ஆட்டும்

அன்று காணா இழந்த அடியோம் காண

அணி அரங்கராசரே ஆடிர் ஊசல்.

பொருள் – வெற்றியை உடைய வேல் போன்று கூரிய கரிய நீண்ட கண்களைக் கொண்ட யசோதையின் முன்பாக, வியர்வை தோன்றும்படியாக, வெண்ணெய்க்காக நீ அன்று ஆடிய ஆட்டம்; மலை போன்ற நான்கு அகண்ட தோள்களை வீசிக் கூத்தாட ஏற்றபடி ஆய்ச்சிப் பெண்களுடன் சேர்ந்து, குற்றம் இல்லாத குரவைக் கூத்து என்னும் நீ ஆடிய ஆட்டம்; பலரும் கூடியுள்ள பொதுவான இடத்தில் மரக்கால்களைக் கட்டிக் கொண்டு ஆடிய ஆட்டம்; வலிமையான காளியன் என்னும் நாகத்தின் தலை மீது ஆடிய குற்றம் இல்லாத ஆட்டம் – இப்படியாக நீ பல ஆட்டங்களை ஆடினாய். அந்தக் காலங்களில் அவற்றை நாங்கள் தரிசிக்கவில்லை. அவற்றை இப்போது தரிசிக்கும்படியாக ஸ்ரீரங்கராஜனே! ஊஞ்சல் ஆடுவாயாக!

………நாளை தொடரும்

பெரிய கோயில் ஊஞ்சல் – 5 October 21, 2008

Posted by sridharan in oonjal.
add a comment

17. ஆர் அமுதின் இன்பமிகு சடகோபன் சொல்

              ஆயிரமும் தெரிந்து எடுத்து அடியார்க்கு ஓதி

       நாரதனும் மனம் உருக இசைகள் பாடு

              நாதமுனிகள் திருநாம நலங்கள் பாடப்

       பார் அதனில் பாரதப் போர் முடிய மூட்டிப்

              பகை வேந்தர் குலம் தொலையப் பார்த்தன் தெய்வத்

       தேர் அதனில் வரும் அரங்கர் ஆடிர் ஊசல்

              சீரங்கநாயகியோடு ஆடிர் ஊசல்.

 

பொருள் – மிகவும் அரிதாகக் கிட்டவல்ல அமிர்தத்தைக் காட்டிலும் இனிமையான சுவை மிகுந்த நம்மாழ்வாரின் ஆயிரம் பாசுரங்களாம் திருவாய்மொழியைக் கண்டு எடுத்தார்; அவற்றை அடியார்களுக்கு உபதேசித்தார்; நாரத முனிவரின் மனமும் உருகும்விதமாகப் பாட வல்லவர் – இப்படிப்பட்ட ஸ்ரீமந்நாதமுனிகள் எம்பெருமானின் பெருமைகள் வெளிப்படும்படியாக அமைத்த பாடல்களை ஊஞ்சல் மண்டபத்தில் பாடியபடி உள்ளனர். முன்பு ஒரு காலத்தின் உலகின் பாரம் குறைவதற்காகப் பாரதப் போரை உண்டாக்கி, அந்த யுத்தத்தில் கௌரவர்களின் அழியும்படியாக, அர்ஜுனனின் தேரில் நின்ற திருவரங்கனே! ஊஞ்சல் ஆடுவாயாக! ஸ்ரீரங்கநாச்சியாருடன் ஊஞ்சல் ஆடுவாயாக!

 

18. வம்பு அமரும் சிகை முந்நூல் தரித்த ஞானி

              வாதியரை வெல் ஆளவந்தார்க்கு அன்பு

      ஆம் எம்பெருமானார்க்கு  எட்டும் இரண்டும் பேசி

              இதம் உரைத்த பெரியநம்பி இரக்கம் பாடத்

      தும்புரு நாரதர் நாத கீதம் பாடத்

              தொண்டர் குழாம் இயல் பாடச் சுருதி பாட

      நம்பெருமாள் திருவரங்கர் ஆடிர் ஊசல்

              நான்முகனார் தாதை ஆடிர் ஊசல்.

 

பொருள் – நேர்த்தியான குடுமியையும், அழகான யஜ்ஞோபவீதத்தையும் தரித்தபடி, புதுமையாக வாதம் செய்கின்ற ஞானம் கொண்டு, தன்னுடன் வாதாடிய அனைவரையும் ஆளவந்தார் வென்றார். இவரிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்த எம்பெருமானாருக்கு திருஅஷ்டாக்ஷரம் மற்றும் த்வயம் ஆகியவற்றை உபதேசம் செய்து, மேலும் நன்மை அளிக்கவல்ல சரமச்லோகத்தையும் உபதேசித்தவர் பெரியநம்பி ஆவார். இப்படிப்பட்ட பெரியநம்பி அருளிச் செய்த எம்பெருமானின் கருணையைத் தெரிவிக்கும் பாடல்களை ஊஞ்சல் மண்டபத்தில் பாடியபடி உள்ளனர். மேலும் தும்புரு மற்றும் நாரதர் ஆகிய இருவரும் பல இன்னிசைகளை இசைத்தபடி உள்ளனர். தொண்டர்கள் பலரும் இயல் திவ்யப் பிரபந்தங்களைப் பாடியபடி உள்ளனர். பலரும் வேதங்களை முழங்கியபடி உள்ளனர். இப்படிப்பட்ட மண்டபத்தின் நம்பெருமாளே! ஸ்ரீரங்கநாதா! ஊஞ்சல் ஆடுவாயாக! நான்முகனின் தந்தையே! ஊஞ்சல் ஆடுவாயாக!

 

19. ஐங்கோலும் ஒரு கோலும் நீர்க் கோலம் போல்

             அழிய முனிந்து அறு சமயம் அகற்றி எங்கள்

      செங்கோலே உலகு அனைத்தும் செல்ல முக்கோல்

             திருக்கையில் கொள் எதிராசன் செயத்தைப் பாடச்

      சங்கு ஓலமிடும் பொன்னித் துறையினின்றே

             தவழ்ந்து ஏறி மறுகு தொறும் தரளம் ஈனும்

      நம் கோயில் நம்பெருமாள் ஆடிர் ஊசல்

             நக்கன் மூதாதையர் ஆடிர் ஊசல்.

 

பொருள் – மன்மதன் தூண்டும் ஐந்து புலன்களின் விஷயங்கள் என்னும் அம்புகள், ஒரு கோல் (ஏக தண்டம்) கொண்ட அத்வைதம் ஆகிய பலவும் நீரில் போடப்பட்ட கோலம் அழிவது போன்று அழிக்கப்பட்டன. அவற்றை இப்படியாகக் கண்டித்தார்; தவறான கருத்துக்களை கூறி வந்த ஆறு சமயங்களை தள்ளினார்; ஸ்ரீவைஷ்ணவம் என்னும் எங்களது செங்கோல் ஆட்சியே அனைத்து உலகில் சென்று பரவி நிற்கும்படியாக த்ரிதண்டத்தைத் தனது அழகான திருக்கரத்தின் ஏந்தியபடி உள்ளார் – இப்படிப்பட்ட இராமானுச முனிவனின் வெற்றியை ஊஞ்சல் மண்டபத்தில் பாடியபடி உள்ளனர். பெரும் ஓசையை உடைய காவேரியின் கரைகளில் உள்ள சங்குப் பூச்சிகள் அங்கிருந்த மெதுவாக ஊர்ந்து வந்து, திருவரங்கப் பெரியகோயிலின் அருகில் வந்து, அந்தத் தெருக்கள் எங்கும் முத்துக்களை இறைக்கின்றன. இப்படிப்பட்ட நமது பெரியகோயிலில் எழுந்தருளியுள்ள நம்பெருமாளே! ஊஞ்சல் ஆடுவாயாக! சிவனின் பாட்டனாகிய (தாத்தா) ஸ்ரீரங்கநாதனே! ஊஞ்சல் ஆடுவாயாக!

 

20. அவத்தம் புல் சமயம் சொல் பொய்யை மெய் என்று

              அணி மிடறு புழுத்தான் தன் அவையின் மேவிச்

      சிவத்துக்கு மேல் பதக்கு உண்டு என்று தீட்டும்

              திருக் கூர வேதியர் கோன் செவ்வி பாடப்

      பவம் துக்கம் பிணி நீங்க நரகம் தூரப்

              பரமபதம் குடி மலியப் பள்ளி கொள்ளும்

      நவம் துப்புச் செங்கனி வாய்க் கரியமேனி

              நம்பெருமாள் அரங்கேசர் ஆடிர் ஊசல்.

 

பொருள் – சிறிதும் பயன் இல்லாத சைவ சமயத்தில் கூறப்பட்ட பொய்யான கருத்துக்கள் அனைத்தையும் உண்மையானவை என்று எண்ணியதால், தனது அழகான கழுத்தில் புழு வைக்கும்படியாக கிருமிகண்டசோழன் ஆனான். இப்படிப்பட்ட அவனது சபையில், “சிவனுக்கு மேல் ஒரு வஸ்து உண்டு”, என்று எழுதியவரும், திருக்கூரம் என்னும் ஊரில் அவதரித்த அந்தணர்களில் மேன்மையானவரும் ஆகிய கூரத்தாழ்வானின் பெருமைகள் பலவற்றையும் ஊஞ்சல் மண்டபத்தில் பாடியபடி உள்ளனர். இங்கு வாழ்பவர்களின் துன்பம், பிணி ஆகியவை நீங்கவும்; ”இங்கு உள்ள அனைவரையும் பரமபதம் அனுப்பினால் ஒழிய இங்கிருந்து கிளம்பமாட்டேன்”, என்று பரமபதம் நிறைந்து போகும்படிச் செய்யவும் சபதம் கொண்ட பெரியபெருமாளே! சயனித்துள்ள திருக்கோலம் என்ன, பவழம் போன்ற சிவந்த திருவாய் என்ன, கருத்த திருமேனி என்ன – இப்படிப்பட்ட அழகனே! நம்பெருமாளே! ஊஞ்சல் ஆடுவாயாக!

 

………..நாளை தொடரும்

             

பெரிய கோயில் ஊஞ்சல் – 4 October 20, 2008

Posted by sridharan in oonjal.
add a comment

13. மரு மாலைப் பசுந்துவளம் தொடைகளோடு

வைகறையில் வந்து திருத்துயில் உணர்த்தித்

திருமாலை திருவடிக்கே சூட்டி நிற்கும்

திருமண்டங்குடிப் பெருமான் சீர்மை பாடப்

பெருமாலை அடைந்து உலகம் மதிமயங்கப்

பேணாதார் படக் கதிரோன் காணாது ஏக

ஒரு மாலை பகலில் அழைத்து ஒளித்த நேமி

ஒளி உள்ளார் அரங்கேசர் ஆடிர் ஊசல்.

பொருள் – ஸ்ரீரங்கநாச்சியாருடன் கூடியுள்ள திருவரங்கனை, தனது திருக்கரங்களில் பசுமையான துளசி மாலையுடன் கூடியவராக, விடியற்காலைப் பொழுதில், திருவரங்கனின் கருவறையை அடைந்து, அவனைத் திருப்பள்ளி எழச்செய்து, திருமாலை என்னும் பிரபந்தத்தை நம்பெருமாளின் திருவடிகளில், திருமண்டங்குடியில் அவதரித்த தொண்டரடிப்பொடியாழ்வார் சமர்ப்பித்து நிற்கிறார். இவர் அருளிச்செய்த பாசுரங்களை ஊஞ்சல் மண்டபத்தில் பாடியபடி உள்ளனர். இந்த உலகில் உள்ளவர்கள் உலக விஷயங்களால் தங்கள் அறிவு மயங்கி, மயக்கத்தில் உள்ளனர். அவர்களது அறியாமை என்னும் விரோதிகள் நீங்கவும், சூரியனை உனது சக்கரத்தால் மறைத்து, பகல் பொழுதில் இரவை வரவழைத்து, அந்த நேரத்தில் உலகம் தடுமாறாமல் இருக்கப் பல சூரியன்களின் ஒளியையுடைய சக்கரத்தை கொண்ட திருவரங்கா! ஊஞ்சல் ஆடுவாயாக!

14. கார் அங்கம் திருவுருவம் செய்ய பாத

கமலம் முதல் முடி அளவும் கண்டு போற்றச்

சாரங்கமுனியை ஊர்ந்து அமலனாதி

தனை உரைத்த பாண்பெருமாள் தகைமை பாட

ஆரம் கொள் பாற்கடல் விட்டு அயனூர் ஏறி

அயோத்தி நகர் இழிந்து பொன்னி ஆற்றி சேர்ந்த

சீரங்க மணவாளர் ஆடிர் ஊசல்

சீரங்கநாயகியோடு ஆடிர் ஊசல்.

பொருள் – மழை நீர் கொண்ட மேகம் போன்ற நிறம் உடைய பெரியபெருமாளை, சிவந்த தாமரை போன்ற திருவடிகள் தொடங்கி திருமுடிவரை அனுபவிக்க எண்ணிய திருப்பாணாழ்வாரை லோகசாரங்கன் என்னும் முனிவன் மீது ஏறி அமர வைத்து, தன்னிடம் அரங்கன் வரவழைத்தான். இப்படியாக வந்த ஆழ்வார் அமலனாதிப்பிரானை அருளிச்செய்தார். இவர் அருளிச்செய்த பாசுரங்களை ஊஞ்சல் மண்டபத்தில் பாடியபடி உள்ளனர். இதனைக் கேட்பதற்காக, திருப்பாற்கடலை விட்டு வந்து, நான்முகனின் ஸத்யலோகம் வந்து, அங்கிருந்து அயோத்தியை அடைந்து, அயோத்தியை விட்டுக் கிளம்பி காவேரியின் நடுவில் உள்ள திருவரங்கம் பெரியகோயிலை அடைந்தாய் போலும். இப்படியாக இங்கு வந்த நம்பெருமாளே! ஊஞ்சல் ஆடுவாயாக! ஸ்ரீரங்கநாச்சியாருடன் ஊஞ்சல் ஆடுவாயாக!

15. விழி பறித்து வெள்ளியை மாவலியை மண்ணும்

விண்ணுலகும் பறித்த குறள் வேடத்து உம்மை

வழி பறித்து மந்திரம் கொண்டு அன்பர் தங்கள்

வல்வினையைப் பறித்த பிரான் வண்மை பாடச்

சுழி பறித்த கங்கை முடி அடியில் தோயத்

தொழுது இரக்கும் முக்கணன் நான்முகனைச் செய்த

பழி பறித்துப் பலி ஒழித்தார் ஆடிர் ஊசல்

பள்ளி கொண்ட திருவரங்கர் ஆடிர் ஊசல்.

பொருள் நீர் பாத்திரத்தின் த்வாரத்தை அடைத்துக் கொண்ட சுக்ராச்சார்யரின் கண்களைப் பறித்து, மாவலியிடமிருந்து பூமியையும் ஆகாயத்தையும் வாமனனாக வந்து தந்திரமாகப் பறித்தாய். நீ செய்த தந்திரம் உனக்கே வினையானது போன்று, உன்னிடமிருந்து திருமந்திரத்தை தனது வாள் வலிமை காட்டித் திருமங்கையாழ்வார் பறித்தார். உன்னுடைய அடியார்களின் இருவினைகளை அவர்களிடமிருந்து பறிப்பதற்காக, ஆறுவகையான பிரபந்தங்களை திருமங்கையாழ்வார் அருளிச்செய்தார். அவரது புகழுடைய பிரபந்தங்களை ஊஞ்சல் மண்டபத்தில் பாடியபடி உள்ளனர். கங்கை நதியைத் தலையில் கொண்ட சிவன், அந்த கங்கை உனது திருவடிகளில் படும்படியாக வணங்கி நிற்கிறார். இதன் காரணம் என்ன? நான்முகனின் தலையைப் பறித்த காரணத்தால் தோஷம் உண்டாக, அதனைப் போக்க உனது திருவடியில் தலை பதித்தார். அவருடைய தோஷத்தை நீக்கிய பெரியபெருமாளே! ஊஞ்சல் ஆடுவாயாக! ஆதிசேஷன் மீது சயனித்துள்ள அழகியமணவாளா! ஊஞ்சல் ஆடுவாயாக!

16. போதனார் நெட்டெழுத்தும் நமனார் இட்ட

குற்றெழுத்தும் புனல் எழுத்தாய்ப்போக மாறன்

வேதம் ஆயிரம் தமிழும் எழுதி அந்நாள்

மேன்மை பெறு மதுரகவி வியப்பைப் பாட

ஓதம் ஆர் மீன் வடிவாய் ஆமை ஏனத்து

உருவாகி அரி குறள் மூ இராமர் ஆகிக்

கோதிலாக் கண்ணனாய்க் கற்கியாகும்

கோயில் வாழ் அரங்கேசர் ஆடிர் ஊசல்.

பொருள் – தாமரை மலரின் வாழும் நான்முகன் உயிர் பிறந்தது முதல் வளர்ந்தபடி உள்ள தலையெழுத்து, இறந்த பின்னர் யமன் எழுத்துகின்ற பாவக் கணக்கு ஆகிய இரண்டும் நீரில் மறையும்படியாக நம்மாழ்வார் அருளிச்செய்த தமிழ்வேதமாகிய திருவாய்மொழி உள்ளது (திருவாய்மொழியைப் படித்தால் நான்முகன் எழுதிய தலையெழுத்தும், யமன் எழுதிய பாவக்கணக்கும் நீங்கும் என்று கருத்து). இதனைப் பட்டோலையில் எழுதிப் பெருமை அடைந்தவர் மதுரகவியாழ்வார் ஆவார். அவரது புகழுடைய பிரபந்தங்களை ஊஞ்சல் மண்டபத்தில் பாடியபடி உள்ளனர். கடலில் திரிகின்ற மீனாகவும், ஆமையாகவும், பன்றியாகவும், நரஸிம்ஹமாகவும், வாமனனாகவும், பரசுராமன் – ஸ்ரீஇராமன் – பலராமன் என்று மூன்று இராமனாகவும், பூர்ணமாகிய கண்ணனாகவும், கல்கியாகவும் அவதரித்த ஸ்ரீரங்கராஜனே! ஊஞ்சல் ஆடுவாயாக!

குறிப்பு – மதுரகவியாழ்வார் அருளிச்செய்த “கண்ணிநுண் சிறுத்தாம்பு” என்னும் பாசுரம் நம்மாழ்வாரைப் பற்றியதே ஆகும். ஆனாலும், நம்மாழ்வார் ஸ்ரீரங்கநாதனுக்குப் புத்ரஸ்தாநீயர் என்பதால், “கண்ணிநுண் சிறுத்தாம்பு” என்னும் பாசுரம் கேட்டால் ஸ்ரீரங்கநாதனுக்கு பெரும் மகிழ்ச்சி உண்டாகும் என்பது பெரியோர் கருத்து.

…நாளை தொடரும்

பெரியகோயில் ஊஞ்சல் – 3 October 19, 2008

Posted by sridharan in oonjal.
add a comment

9. திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் என்ற

திகழ் அருக்கன் அணி நிறமும் திகிரி சங்கும்

இருள் கொண்ட கருங்கங்குல் இடையே கோவல்

இடை கழியில் கண்ட பிரான் ஏற்றம் பாட

மருக்கொண்ட கொன்றையான் மலரின் மேலோன்

வானவர் கோன் முதலானோர் மகுட கோடி

நெருக்குண்ட தாள் அரங்கர் ஆடிர் ஊசல்

நீளைக்கு மணவாளர் ஆடிர் ஊசல்.

பொருள் – இருள் சூழ்ந்த கருமையான இரவுப் பொழுதில், திருக்கோவலூரில் உள்ள ஒரு குடிசையில், “மஹாலக்ஷ்மியைக் கண்டேன், நன்றாக விளங்கும் சூரியன் போன்ற அழகான நிறத்தைக் கண்டேன், சக்கரம் மற்றும் சங்கையும் கண்டேன்”, என்று பாடியவரும், எம்பெருமானை இப்படியாகத் தரிசித்தவரும், தலைவரும் ஆகிய பேயாழ்வார் அருளிச்செய்த உயர்ந்த பிரபந்தத்தை ஊஞ்சல் மண்டபத்தில் பாகவதர்கள் பாடியபடி நிற்கின்றனர். மிகுந்த நறுமணம் கொண்ட கொன்றை மலர்களைத் தலையில் அணிந்த சிவன், தாமரை மலரில் அமர்ந்துள்ள நான்முகன், வானவர்களின் அரசனாகிய இந்திரன் போன்றவர்களின் க்ரீடங்கள் வரிசையாக அவர்கள் வணங்கும்போது உன்னுடைய திருவடிகளை நெருக்கியபடி உள்ளன. இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதா! ஊஞ்சல் ஆடுவாயாக! நீளாதேவியின் நாயகனே! ஊஞ்சல் ஆடுவாயாக!

10. நான்முகனை நாரணனே படைத்தான் அந்த

நான்முகனும் நக்கபிரானைப் படைத்தான்

யான் முகமாய் அந்தாதி அறிவித்தேன் என்று

யார்க்கும் வெளியிட்ட பிரான் இயல்பைப் பாடப்

பால் முகம் ஆர் வளை நேமி படைகள் காட்ட

பாசடைகள் திருமேனிப் படிவம் காட்டத்

தேன் முகம் மா முளறி அவயவங்கள் காட்டச்

செழும் தடம் போல் அரங்கேசர் ஆடிர் ஊசல்.

பொருள் – “நாராயணன் நான்முகனான ப்ரம்மனைப் படைத்தான், ப்ரம்மன் சிவனைப் படைத்தான் என்றும் இத்தகைய முக்கியமான தத்துவம் தெரியப் பெற்ற நான், இதனை என்னுடைய அந்தாதி என்னும் பிரபந்தத்தில் வெளியிட்டேன்”, என்று தொடங்கி உயர்ந்த கருத்துக்களை அனைவருக்கும் திருமழிசையாழ்வார் வெளியிட்டார். இவருடைய உயர்ந்த பிரபந்தத்தை ஊஞ்சல் மண்டபத்தில் பாகவதர்கள் பாடியபடி நிற்கின்றனர். ஸ்ரீரங்கநாதா! உன்னுடைய திவ்ய ஆயுதங்களைக் காண்பதற்குப் பால் போன்ற நிறம் கொண்ட சங்குப் பூச்சிகள் போன்றும், சக்கரவாகப் பறவைகள் போன்றும் உள்ளன. உன்னுடைய அழகான திருமேனியின் நிறம், பசுமையான தாமரை இலைகள் போன்று உள்ளன. உன்னுடைய திருவடி முதலான உறுப்புகள், தேன் நிறைந்த தாமரை மலர் போன்று உள்ளன. இப்படியாக நீ செழுமையாக உள்ள குளம் போன்று இருக்கிறாய். நம்பெருமாளே! ஊஞ்சல் ஆடுவாயாக.

11. மருள் இரிய மறம் இரிய அனைத்து உயிர்க்கும்

மயல் இரிய வினை இரிய மறையின் பாடல்

இருள் இரிய என்று எடுத்துத் தொண்டர் தங்கள்

இடர் இரிய உரைத்த பிரான் இட்டம் பாட

அருள் இரிய அறம் இரிய உலகை ஆண்ட

ஆடகத்தோன் அகம்பரன் என்று அபிமானித்த

பொருள் இரிய சொல் இரிய மார்வம் கீண்ட

பொன்னி சூழ் திருவரங்கர் ஆடிர் ஊசல்.

பொருள் – இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களின் அறியாமை நீங்குவதற்கும், துன்பங்கள் நீங்குவதற்கும், அறியாமையால் உண்டாகும் மயக்கம் நீங்குவதற்கும், பந்தத்தில் சிக்க வைக்கும் இரு வினைகள் நீங்குவதற்கும், அடியார்களின் துன்பங்கள் விலகுவதற்கும் – குலசேகராழ்வார், “இருள் இரிய”, என்று தொடங்கும் பெருமாள் திருமொழியை அருளிச்செய்தார். இதனை ஊஞ்சல் மண்டபத்தில் பாகவதர்கள் பாடியபடி நிற்கின்றனர். முன்பு இந்த உலகில் கருணை என்பதே இல்லாமல், தர்மம் அழியும்படி, மூன்று உலகங்களையும் ஆட்சி செய்த கர்வத்தால் தானே உயர்ந்த தெய்வம் என்றபடி இரண்யன் இருந்தான். அவனுடைய அந்தக் கர்வம் ஒழியும்படி, அவ்வாறு அவன் கூறிய சொற்கள் ஒழியும்படி, நரஸிம்ஹனாகத் தோன்றி அவனுடைய மார்பைக் கிழித்து எறிந்த அழகியமணவாளா! காவேரியால் சூழப்பட்ட ஸ்ரீரங்கநாதா! ஊஞ்சல் ஆடுவாயாக.

12. அரன் என்றும் அயன் என்றும் புத்தன் என்றும்

அலற்றுவார் முன் திருநாரணனே ஆதி

பரன் என்று மறை உரைத்துக் கிழி அறுத்த

பட்டர்பிரான் பாடிய பல்லாண்டு பாடக்

கரன் என்ற மாரீசன் கவந்தன் என்ற

கண்டகர் ஆருயிர் மடியக் கண்டு இலங்கா

புரம் வென்ற சிலை அரங்கர் ஆடிர் ஊசல்

புகழ் உறையூர் வல்லியோடு ஆடிர் ஊசல்.

பொருள் – அனைத்திற்கும் காரணமான பரமாத்மா சிவனே என்றும், நான்முகனே என்றும், புத்தனே என்றும் பலவாறு பிதற்றியபடி இருந்தனர். இவர்களுக்கு முன்பாக நின்று, ஸ்ரீமந் நாராயணனே அனைத்திற்கும் தொடக்கமான பரதேவதை என்று வேதங்களை ப்ரமாணங்களாகக் கூறி பாண்டியர் கட்டி வைத்த பொற்கிழியைப் பெரியாழ்வார் அறுத்தார். இவர் அருளிச்செய்த திருப்பல்லாண்டு பாசுரங்களை ஊஞ்சல் மண்டபத்தில் பாடியபடி உள்ளனர். அரன் என்னும் தீயவன், மாரீசன் என்னும் கொடியவன், கவந்தன் என்னும் அசுரன் ஆகியவர்களின் உயிர் நீங்கும்படியாக, அவர்களை அழித்து, இலங்கையை வென்று, வில்லை ஏந்திய பெரியபெருமாளே! ஊஞ்சல் ஆடுவாயாக! சிறந்த புகழ் கொண்ட உறையூர் கமலவல்லி நாச்சியாருடன் சேர்ந்து ஊஞ்சல் ஆடுவாயாக.

…..நாளை தொடரும்

பெரியகோயில் ஊஞ்சல் – 2 October 18, 2008

Posted by sridharan in oonjal.
add a comment

5. மலைமகளும் அரனும் ஒரு வடம் தொட்டு ஆட்ட

வாசவனும் சசியும் ஒரு வடம் தொட்டு ஆட்ட

கலைமகளும் அயனும் ஒரு வடம் தொட்டு ஆட்ட

கந்தனும் வள்ளியும் கலந்து ஒரு வடம் தொட்டு ஆட்ட

அலைமகரப் பாற்கடலுள் அவதரித்த

மலர் மகளும் நிலமகளும் இரு மருங்கில் ஆட எங்கள்

தண் அரங்க மணவாளர் ஆடிர் ஊசல்.

பொருள் – பார்வதியும் அவளது கணவன் சிவனும் ஒரு சங்கிலியைப் பிடித்து ஆட்டி விடுகின்றனர். இந்திரனும் அவன் மனைவி சசியும் ஒரு சங்கிலியைப் பிடித்து ஆட்டி விடுகின்றனர். சரஸ்வதியும் நான்முகனும் ஒரு சங்கிலியை பிடித்து ஆட்டி விடுகின்றனர். முருகனும் வள்ளியும் ஒன்றாக நின்று ஒரு சங்கிலியைப் பிடித்து ஆட்டி விடுகின்றனர். அலைகள் மற்றும் சுறா மீன்கள் நிறைந்த திருப்பாற்கடலில் தோன்றிய தாமரையில் வாசம் செய்கின்ற மஹாலக்ஷ்மி, பூமிப்பிராட்டி, ஆயர்களின் அன்பால் வளர்க்கப்பட்ட நீளாதேவி ஆகியோர் உன்னுடைய இரண்டு பக்கத்திலும் அமர்ந்து ஆடும்படியாக, குளிர்ந்த திருவரங்கத்தில் வாசம் செய்யும் எங்களது அழகிய மணவாளா! ஊஞ்சல் ஆடுவாயாக.

6. திருவழுதி வளநாடன் பொருநைச் சேர்ப்பன்

ஸ்ரீபராங்குச முனிவன் வகுளச்செல்வன்

தரு வளரும் குருகையர் கோன் காரி மாறன்

சடகோபன் தமிழ் வேதம் ததியர் பாடக்

கருணை மொழி முகமதியம் குறு வேர்வு ஆட

கரிய குழல் கத்தூரி நாமத்து ஆட

அருகிருக்கும் தேவியார்கள் அது கொண்டாட

அணி அரங்கத்து எம்பெருமான் ஆடிர் ஊசல்.

பொருள் – வளமான பாண்டிய நாட்டில் அவதரித்தவர், தாமிரபரணி நதியின் கரையில் வாழ்பவர், ஸ்ரீபராங்குசன் என்னும் திருநாமம் பெற்ற முனிவர், மகிழமலர் மாலை அணிந்துள்ளவர், மரங்கள் ஓங்கி வளர்கின்ற திருக்குருகையின் தலைவர், காரி என்பவரின் புத்திரனான மாறன் என்று போற்றப்படுபவர் – இப்படிப்பட்ட நம்மாழ்வார் அருளிச்செய்த தமிழ் வேதம் என்னும் திருவாய்மொழியை, ஊஞ்சல் மண்டபத்தில் பாகவதர்கள் பாடியபடி நிற்கின்றனர். கருணையைப் பொழிகின்ற சந்திரன் போன்ற உன்னுடைய அழகான திருமுகத்தில் வியர்வைத் துளிகள் அசைந்தபடி உள்ளன. நீ ஊஞ்சல் ஆடும்போது உன்னுடைய அழகான தலை முடியும், நெற்றியில் உள்ள கஸ்தூரி திலகமும் ஒன்றாக ஆடுகின்றன. இதனை அருகில் உள்ள உனது பிராட்டிமார்கள் கண்டு மகிழ்ந்தபடி உள்ளனர். ஸ்ரீரங்கநாதனே! இப்படியாக நீ ஊஞ்சல் ஆடுவாயாக.

7. வையம் ஒரு பொன் தகட்டுத் தகளியாக

வார்கடலே நெய்யாக அதனுள் தேக்கி

வெய்யகதிர் விளக்காக செஞ்சொல் மாலை

மெல் அடிக்கே சூட்டினான் மேன்மைப் பாடத்

துய்ய மதி மண்டலத்தின் மறுவே ஒப்பச்

சோதி விடு கத்தூரி துலங்கு நாமச்

செய்யதிருமுகத்து அரங்கர் ஆடிர் ஊசல்

ஸ்ரீரங்க நாயகியோடு ஆடிர் ஊசல்.

பொருள் – இந்த உலகத்தையே தங்கத்தால் செய்யப்பட்ட ஓர் அகல் விளக்காகவும், பரந்த கடலை நெய் போன்று அந்த அகல் விளக்கில் நிரப்பியும், கடுமையான கதிர்கள் கொண்ட சூரியனை அதில் விளக்காகவும் இட்டு, இனிமையான தமிழ் மொழியில் ஒரு சொல் மாலையை உன்னுடைய மென்மையான திருவடிகளில் பொய்கையாழ்வார் சூட்டினார். இப்படியாக உன்னுடைய மேன்மையை வெளிப்படுத்துகின்ற பொய்கையாழ்வாரின் பிரபந்தங்களை ஊஞ்சல் மண்டபத்தில் பாகவதர்கள் பாடியபடி நிற்கின்றனர். துய்மையான சந்திரனின் நடுவில் உள்ள களங்கம் அதற்கு அழகை உண்டாக்குவது போல், ஒளி வீசும் உனது திருமுகத்தில் உள்ள கஸ்தூரி திலகம்உனது அழகை மேம்படுத்தியபடி உள்ளது. ஸ்ரீரங்கநாதா! ஊஞ்சல் ஆடுவாயாக! ஸ்ரீரங்கநாயகியுடன் ஊஞ்சல் ஆடுவாயாக.

8. அன்பு என்னும் நல் பொருள் ஓர் தகளியாக

ஆர்வமே நெய்யாக அதனுள் தேக்கி

இன்பு உருகு சிந்தை இடு திரியா ஞானத்து

இலகு விளக்கு ஏற்றினான் இசையைப் பாடப்

பொன் புரையும் புகழ் உறையூர் வல்லியாரும்

புதுவை நகர் ஆண்டாளும் புடை சேர்ந்தாட

முன்பிலும் பின்பழகிய நம்பெருமாள் தொல்லை

மூவுலகுக்கும் பெருமாள் ஆடிர் ஊசல்.

பொருள் – அன்பு என்ற சிறந்த ஒரு பொருளை அகல் விளக்காகவும், அந்த அகலில் பக்தி என்பதையே நெய்யாக நிரப்பியும், உன்னைக் கண்ட மகிழ்ச்சியால் உருகும் மனதையே திரியாகவும், சிறந்த ஞானத்தையே விளக்காகவும் பூதத்தாழ்வார் ஏற்றி வைத்தார். இப்படியாக இவர் அருளிச்செய்த பிரபந்தத்தை ஊஞ்சல் மண்டபத்தில் பாகவதர்கள் பாடியபடி நிற்கின்றனர். ஸ்ரீரங்கநாச்சியாரை ஒத்த புகழ் உடைய உறையூர் கமலவல்லி நாச்சியாரும், ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த ஆண்டாளும் உனது அருகில் இருந்தபடி ஆடுகின்றனர். இப்படியாகமுன் பக்கத்தைவிட, பின்னால் காணும்போது மிகவும் அழகாக விளங்கும் நம்பெருமாளே! மூன்று உலகங்களிலும் மிகவும் பழமையானவனே! நீ ஊஞ்சல் ஆடுவாயாக.

…….நாளை தொடரும்

திருவரங்கம் பெரியகோயில் ஊஞ்சல் – 1 October 17, 2008

Posted by sridharan in oonjal.
Tags: , , ,
4 comments

ஸ்ரீரங்கநாதன் ஊஞ்சல் விஷயமாக ஸ்வாமி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்

அருளிச் செய்த ஊஞ்சல் பாசுரங்கள்

தனியன்

அண்டம் பந்தரில் பற்றுக் கால்களாக

அறிவு விட்டம் கரணம் சங்கலிகள் ஆகக்

கொண்ட பிறப்பே பலகை வினை அசைப்போர்

கொடு நரக சுவர்க்கப் பூ வெளிகள் தம்மில்

தண்டல் இல் ஏற்றம் இறக்கம் தங்கல் ஆக

தடுமாறி இடர் உழக்கும் ஊசல் மாறத்

தொண்டர்க்கா மணவாளர் பேரர் கூடித்

தொகுத்திட்டார் திருவரங்கத்து ஊசறானே.

பொருள் – இந்த உலகமே பந்தலாகவும், பாசம் என்பதே ஊஞ்சல் மாட்டுகின்ற தூண்களாகவும், அறிவு என்பதே ஊஞ்சலின் சங்கலிகளை மாட்டும் கொம்பாகவும், புலன்களே ஊஞ்சலின் சங்கிலிகளாகவும், இந்தப் பிறவியே ஊஞ்சலின் பலகையாகவும், நமது நல்வினை மற்றும் தீவினை ஆகிய இரண்டும் ஊஞ்சலை ஆட்டுபவர்களாகவும் உள்ளன. இந்த ஊஞ்சலானது கொடிய நரகம், ஸ்வர்கம், பூமி முதலான வெளியிடங்கள் – இறங்குதல், தடை இல்லாமல் ஏறுதல், ஓர் இடத்தில் நிலைத்தல், பல இடங்களில் அலைந்து துன்பம் கொள்ளுதல் என்பது போன்ற பல ஆட்டங்களைக் கொண்டுள்ளன. ஸ்ரீரங்கநாதனின் அடியார்களுக்கு இப்படிப்பட்ட மாறுதல் என்னும் ஆட்டங்கள் நீங்கும் விதமாக அழகிய மணவாள தாஸரும், அவரது பேரனாகிய கோனேரியப்பன் ஐயங்காரும் சேர்ந்து திருவரங்கத்தைப் பற்றிய ஊஞ்சல் பாட்டு அருளினார்கள்.

காப்பு

புதுவைநகர்ப் பட்டர்பிரான் சரண்கள் போற்றி

பொய்கை பூதன் பேயார் பாதம் போற்றி

சதுமறைச் சொல் சடகோபன் சரணம் போற்றி

தமிழ்ப்பாணன் தொண்டரடிப்பொடி தாள் போற்றி

முதுபுகழ் சேர் மழிசையர் கோன் பதங்கள் போற்றி

முடிக்குலசேகரன் கலியன் கழல்கள் போற்றி

மதுரகவி எதிராசன் கூரத்தாழ்வான்

வாழ்வான பட்டர் திருவடிகள் போற்றி.

பாசுரங்கள் தொடக்கம்

1. திருவாழத் திருவாழி சங்கம் வாழத்

திருவனந்தன் கருடன் சேனையர் கோன் வாழ

அருள் மாறன் முதலாம் ஆழ்வார்கள் வாழ

அளவு இல் குணத்து எதிராசன் அடியார் வாழ

இருநாலு திருஎழுத்தின் ஏற்றம் வாழ

ஏழ் உலகு நால் மறையும் இனிது வாழ

பெருவாழ்வு தந்தருள் நம்பெருமாள் எங்கள்

பெரிய பெருமாள் அரங்கர் ஆடிர் ஊசல்.

பொருள் – ஸ்ரீரங்கநாச்சியார் வாழ்வதற்காகவும், சங்கு சக்கரங்கள் வாழ்வதற்காகவும், ஆதிசேஷன் – கருடன் – சேனைமுதலியார் ஆகியோர் வாழ்வதற்காகவும், உன்னுடைய அருளைப் பெற்ற நம்மாழ்வர் தொடக்கமான ஆழ்வார்கள் வாழ்வதற்காகவும், எல்லையற்ற உயர்ந்த குணங்களைக் கொண்ட எம்பெருமானார் மற்றும் அவரது தொண்டர்கள் வாழ்வதற்காகவும், திருஅஷ்டாக்ஷர மந்திரத்தின் மேன்மை, பதினான்கு லோகங்கள், நான்கு வேதங்கள் ஆகிய பலவும் வாழ்வதற்கும் ஏற்றபடி இனிமையான வாழ்க்கையை அருள்கின்ற நம்பெருமாளே! எங்களது உயிரான பெரியபெருமாளே! ஸ்ரீரெங்கநாதா! நீ ஊஞ்சல் ஆடுவாயாக!

2. உயர இட்ட கற்பக பூப்பந்தர் நீழல்

ஒள் பவளம் கால் நிறுவி ஊடு போட்ட

வைர விட்டத்து ஆடகம் சங்கிலிகள் நாற்றி

மரகதத்தால் பலகை தைத்த ஊசன் மீதே

தயிரில் இட்ட மத்து உழக்கும் வெண்ணெய்க்கு ஆடி

தட மறுகில் குடம் ஆடி தழல் வாய் நாகம்

அயர இட்டு அன்று ஆடிய நீர் ஆடிர் ஊசல்

அணியரங்கர் நம்பெருமாள் ஆடிர் ஊசல்.

பொருள் – கற்பகச் சோலை போன்று உயரமாக அமைக்கப்பட்ட மலர்களால் ஆகிய பந்தலின் நிழல் உள்ளது. அதன் கீழ், ஒளி வீசும் பவளத்தால் செய்யப்பட்ட தூண்களை நிறுத்தி, அதன் நடுவில் வைரம் பதிக்கப்பட்ட ஊஞ்சல் மாட்டும் கொம்பு உள்ளது. அந்தக் கொப்பில், தங்கத்தால் செய்யப்பட்ட ஊஞ்சலின் சங்கிலிகள் உள்ளன. அந்தச் சங்கிலிகளில் மரகதம் கொண்டு செய்யப்பட்ட ஊஞ்சல் பலகை உள்ளது. நம்பெருமாளே! அந்தப் பலகையில் எழுந்தருளுவாயாக! முன்பு ஒரு காலகட்டத்தில், தயிரில் வைத்து கடையப்படும் மத்து கொண்டு எடுக்கப்பட்ட வெண்ணெய்க்காக ஆய்ச்சியர் முன்பு ஆடினாய்; நீண்ட ஆய்ப்பாடி நகரத்தின் தெருக்களில் குடக்கூத்து நடனம் ஆடினாய்; விஷம் நிறைந்த நெருப்பைக் கக்குகின்ற வாயை உடைய காளியன் சோர்ந்து போகும்படி ஆடினாய். இப்படிப்பட்ட நம்பெருமாளே! ஊஞ்சல் ஆடுவாய்! அழகான திருவரங்கத்தில் வாசம் செய்யும் நம்பெருமாளே! ஊஞ்சல் ஆடுவாய்!

3. மீன் பூத்த விசும்பு அது போல் தரளம் கோத்து

விரித்த நீலப்பட்டு விதானம் தோன்ற

வான் பூத்த கலை மதிபோல் கவிகை ஓங்க

மதிக்கதிர் போல் கவரி இருமருங்கும் வீச

கான் பூத்த தனிச்செல்வன் சிலையுள் மின்னல்

கருமுகில் போல் கனமணி வாசிகையின் நாப்பண்

தேன் பூத்த தாமரையாள் மார்பில் ஆட

தென்னரங்க மணவாளர் ஆடிர் ஊசல்.

பொருள் – ஊஞ்சலின் மேல் உள்ள விதானமானது, முத்துக்கள் கோர்க்கப்பட்ட நீல நிற பட்டுத் துணியால் அமைக்கப்பட்டுள்ளது. இதனைக் காணும்போது, நக்ஷத்திரங்கள் கூடிய ஆகாயம் போல் உள்ளது. ஆகாயத்தில் காணப்படுகின்ற பதினாறு கலைகளுடன் கூடிய சந்திரன் போன்று வெண்கொற்றக் குடை உயர்ந்து நிற்கிறது. சந்திரனின் குளிர்ந்த கதிர்கள் போன்று உனது இரண்டு பக்கத்திலும் சாமரங்கள் வீசப்படுகின்றன. உனது திருமேனி மீது நவரத்தினங்களின் கூட்டத்தால் தொடுக்கப்பட்ட மாலை அசைகின்றது. அந்த மாலையின் நடுவே, தேன் சிந்தும் தாமரை மலரில் வாழ்கின்ற ஸ்ரீரங்கநாச்சியார் உனது திருமார்பில் அமர்ந்தபடி, உன்னுடன் சேர்ந்து ஆடுகிறாள். இதனைக் காணும்போது, கற்பக வனத்தில் வசிக்கின்ற செல்வம் நிறைந்த இந்திரனின் வில் நடுவே தோன்றுகின்ற மழைக்கால மின்னல் போன்று உள்ளது. இப்படியாகத் தென்திசையில் எழுந்தருளியுள்ள அழகியமணவாளா! ஊஞ்சல் ஆடுவாயாக!


4. பூசுரரும் புரவலரும் வானநாட்டுப்

புத்தேளிர் குழுவும் அவர் பூவைமாரும்

வாசவனும் மலர் அயனும் மழுவலானும்

வணங்குவான் அவசரம் பார்த்து இணங்குகின்றார்

தூசு உடைய கொடித் தடந்தேர் மானம் தோன்றச்

சுடர் இரண்டும் பகல் விளக்கா தோன்றத் தோன்றும்

தேசுடைய திருவரங்கர் ஆடிர் ஊசல்

ஸ்ரீரங்கநாயகியோடு ஆடிர் ஊசல்.

பொருள் – இந்தப் பூமியில் தேவர்கள் போன்று வாழ்கின்ற அந்தணர்கள், அரசர்கள், வான் உலகில் வாழ்கின்ற தேவர்களின் கூட்டங்கள், தேவர்களின் மனைவிமார்கள், இந்திரன், தாமரையில் பிறந்த நான்முகன், மழு என்ற ஆயுதம் ஏந்திய சிவன் ஆகியோர் நீ ஊஞ்சல் எப்போது ஆடப்போகிறாய் என்று எண்ணியபடி உன்னை வணங்கப் பெரியகோயிலில் கூடி உள்ளனர். சீலை கொண்டு கட்டப்பட்ட பெரிய தேர், விமானம் ஆகிய இரண்டின் மீதும் வருகின்ற சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இருவரது ஒளியும், உன் முன்பாகப் பகல் பொழுதில் ஏற்றி வைத்த விளக்கு மங்குவது போன்று உள்ளது. இப்படிப்பட்ட ஒளியுடன் காணப்படும் ஸ்ரீரங்கநாதா! ஊஞ்சல் ஆடுவாயாக! ஸ்ரீரங்கநாச்சியாருடன் சேர்ந்து ஊஞ்சல் ஆடுவாயாக!

…நாளை தொடரும்