jump to navigation

இராமாநுச நூற்றந்தாதி – வ்யாக்யானம் May 9, 2019

Posted by sridharan in இராமானுச100அந்தாதி.
2 comments

Please click the link given below:

ramanuja noorthandadi – vyakyanam

 

நம்பெருமாள் விஜயம் – 268வது இதழ் April 27, 2018

Posted by sridharan in இராமானுச100அந்தாதி.
1 comment so far

Please click the link given below:

namperumal-vijayam-apr-2-2018

35. இராமானுச நூற்றந்தாதி(பாசுரங்கள் 69-70) March 3, 2008

Posted by sridharan in இராமானுச100அந்தாதி.
3 comments
69. சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து * முன் நாள்
      அந்தமுற்று ஆழ்ந்தது கண்டு * அவை என்றனக்கு அன்று அருளால்
      தந்த அரங்கனும் தன் சரண் தந்திலன் தானது தந்து *
      எந்தை இராமானுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே.

விளக்கவுரை – ப்ரளயத்தின்போது மனம் மற்றும் அனைத்து இந்த்ரியங்களும் அழிந்து, நாசம் அடைந்து, அசித் பொருள்களுடன் இணைந்தபடி கிடந்தது. அந்தக் காலகட்டத்தில் இப்படிப்பட்ட மனம் மற்றும் இந்த்ரியங்களை எனக்கு அளித்த திருவரங்கன், தனது அபயஹஸ்தத்தை மட்டுமே காண்பித்தபடி இருந்தான்; தனது திருவடிகளில் சரணம் என்று என்னைச் சேர்த்துக் கொள்ளவில்லை. அந்தச் சூழ்நிலையில் எனது தந்தையான எம்பெருமானார், ஸ்ரீபெரும்பூதூரில் அவதரித்து, நான் வசித்து வந்த திருவரங்கத்தைத் தேடி வந்தார். என்னை வாரி எடுத்து, என்னிடமிருந்து எதனையும் எதிர்பாராமல், ஸ்ரீரங்கநாதனே அளிக்காமல் இருந்த அவனது திருவடிகளை எனக்கு அளித்தார். இப்படியாகப் பகவானே எடுக்கத் தயங்கிய என்னை, தான் எடுத்துக் கொண்டார்.

70. என்னையும் பார்த்து என் இயல்வையும் பார்த்து எண்ணில் பல்குணத்த
       உன்னையும் பார்க்கில் அருள் செய்வதே நலம் அன்றி என்பால்
       பின்னையும் பார்க்கில் நலம்முளதே உன் பெரும் கருணை
       தன்னை என் பார்ப்பர் இராமானுச உன்னைச் சார்ந்தவரே.

விளக்கவுரை – எம்பெருமானாரே! மிகுந்த பாவங்களுடன், உலக விஷயங்களில் ஈடுபட்டபடி உள்ள என்னை நீவிர் பார்க்க வேண்டும். இவ்விதம் உலக விஷயங்களில் மட்டுமே ஈடுபட்டபடி உள்ள என்னுடைய குணங்களை நீவிர் காண வேண்டும். எண்ண இயலாத உயர்ந்த திருக்கல்யாண குணங்கள் கொண்டுள்ள உம்மையே நீவிர் ஒருமுறை பார்த்துக் கொள்ள வேண்டும். இப்படியாக ஒப்பு நோக்கிய பார்வை மூலம், பரமகாருணிகரான நீவிர், எல்லையற்ற பாவங்கள் நிறைந்த என்னை வாரி எடுத்து, உமது கருணைக்கு இலக்காக்க வேண்டும். இவ்விதம் நீவிர் செய்யாமல், என்னைக் காப்பாற்ற என்னிடம் வேறு ஏதேனும் நன்மை உள்ளதா என்று நீவிர் ஆராய்ந்து பார்த்தால், உமது திருவடிகளை அண்டியுள்ளவர்கள், உம்முடைய உயர்ந்த குணங்களைக் குறித்து ஐயம் கொள்ள மாட்டார்களா?

34. இராமானுச நூற்றந்தாதி(பாசுரங்கள் 67-68) March 2, 2008

Posted by sridharan in இராமானுச100அந்தாதி.
add a comment
67. சரணம் அடைந்த தருமனுக்கா * பண்டு நூற்றுவரை
      மரணம் அடைவித்த மாயவன் * தன்னை வணங்க வைத்த
      கரணம் இவை உமக்கு அன்று என்று இராமானுசன் உயிர்கட்கு
      அரண் அங்கு அமைத்திலனேல் * அரணார் மற்று இவ்வாருயிர்க்கே.

விளக்கவுரை – பெரியபிராட்டி தானே சீதையாக வந்து இராவணனிடம், “இராமனைச் சரணம் அடைவாய்”, என்று கூறியபோதும் இராவணன் மறுத்துவிட்டான். அது போல அன்றி, கண்ணனை முழுவதுமாகத் தர்மன் சரணம் அடைந்தான். இப்படிப்பட்ட தர்மனுக்காக முன்பு ஒரு காலகட்டத்தில், மஹாபாரதப் போரில், கௌரவர்கள் நூறு பேர்களை ஸர்வேச்வரன் அழித்தான். கண்ணனை ஏன் மாயவன் என்றார் – சக்கரம் கொண்டு சூரியனை மறைத்து பகல் பொழுதை இரவாக்கியும், “ஆயுதம் எடுக்க மாட்டேன்” என்ற சபதத்தை மீறி பீஷ்மருக்கு எதிராக ஆயுதம் எடுக்க முற்பட்டதையும், அர்ஜுனனை முன்னே நிறுத்தி உபதேசம் செய்ததையும், தனது மேன்மைகள் எதனையும் பாராமல் அர்ஜுனனுக்குத் தேர் ஓட்டியதையும், பாண்டவர்களுக்காகத் தூது சென்றதையும் காணும்போது மாயமான செயல்கள் உள்ள கண்ணனை, “மாயவன்” என்றும் கூறலாம் அல்லவா? இப்படிப்பட்ட அந்தச் ஸர்வேச்வரன் தன்னைச் சரணம் புகவேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த உடலையும் உறுப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்தான்; இந்த உறுப்புகள் உங்களுக்காக (நமக்காக) ஸம்ஸாரத்தில் ஈடுபடுவதற்காக அல்ல, கைங்கர்யம் செய்வதற்கே – என்று எம்பெருமானார் உபதேசித்தார். இவ்விதமாக எம்பெருமானார் இந்த உலகில் உள்ள ஜீவன்களுக்கு பாதுகாப்பான வழியை உபதேசித்தார். ஆகவே எம்பெருமானாரைக் காட்டிலும் நமக்குப் பாதுகாப்பு வேறு யார் உள்ளனர்?

68. ஆரெனக்கின்று நிகர் சொல்லில் * மாயன் அன்று ஐவர் தெய்வத்
       தேரினில் செப்பிய கீதையின் செம்மை * பொருள் தெரியப்
        பாரினில் சொன்ன இராமானுசனைப் பணியும் நல்லோர்
        சீரினில் சென்று பணிந்தது * என் ஆவியும் சிந்தையுமே.

விளக்கவுரை – இந்த உயிர்களின் காரணமாக உள்ள கண்ணன் – பூதனை, சகடாசுரன் போன்ற அசுரர்களை வதைத்தும்; பசுக்கள் மற்றும் கோபர்களை ஆதரித்தும்; கோவர்த்தனம் எடுத்து அவர்களைக் காத்தும்; யசோதை, அக்ரூரர், அர்ஜுனன் போன்றவர்களுக்குத் தனது விச்வரூபத்தைக் காண்பித்தும் – இவ்விதமாக பல வியப்பளிக்கும் செயல்களை புரிந்த மாயன் ஆவான். அவன் மஹாபாரத யுத்தத்தின்போது, பஞ்சபாண்டவர்களுக்கு வெற்றியை அளிப்பதற்காக, தனது (கண்ணன்) திருவடிகள் பட்ட புனிதமான தேரில் அமர்ந்து, மோக்ஷ உபாயமான ஸ்ரீமத் பகவத் கீதையை உபதேசம் செய்தான். இப்படிப்பட்ட கீதையின் உண்மையான ஆழ்பொருளை, மற்றவர்கள் போன்று தனது விருப்பப்படி பொருள் கூறாமல், உபனிஷத்துக்கள் மூலமாக ஆராய்ந்து, கீதாபாஷ்யம் மூலமாக, இந்த உலகிற்கு நன்கு விளங்கும்படி செய்தவர் உடையவர் ஆவார். அவருடைய திருவடிகளில் – ராமாநுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே – என்று பணிந்தவர்கள் கூரத்தாழ்வான் போன்றவர்கள் ஆவர். இவர்களது உயர்ந்த திருக்கல்யாண குணங்களில் சென்று எனது மனமும் ஆத்மாவும் படிந்துவிட்டது. இனி இந்த உலகில் எனக்கு நிகரானவர்கள் யார் உள்ளனர்?

33. இராமானுச நூற்றந்தாதி(பாசுரங்கள் 65-66) March 1, 2008

Posted by sridharan in இராமானுச100அந்தாதி.
add a comment
65. வாழ்வற்றது தொல்லை வாதியர்க்கு * என்றும் மறையவர்தம்
       தாழ்வற்றது தவம் தாரணி பெற்றது * தத்துவ நூல்
       கூழற்றது குற்றம் எல்லாம் பதித்த குணத்தினர்க்கு அந்
       நாழற்றது * நம் இராமானுசன் தந்த ஞானத்திலே.

விளக்கவுரை – எங்களது எஜமானராக உள்ள எம்பெருமானார், எங்களிடம் எந்தவிதமான கைம்மாறும் எதிர்பார்க்காமல், தனது அளவற்ற கருணை காரணமாக, மிகவும் உயர்ந்த ஞானத்தை எங்களுக்கு அளித்தார். இந்த ஞானம் காரணமாக வேதங்களை அடியுடன் தள்ள முயன்ற பௌத்தர் போன்றவர்களும், வேதவரிகளுக்குத் தவறான பொருள் கற்பிக்க முயன்ற யாதவப்ரகாசர் போன்றவர்களும் தங்கள் வாழ்வை இழந்தனர். இவ்விதம் களைகள் நீக்கப்பட்ட பின்னர், பயிர்கள் தடையின்றி வளர்வது போன்று, நீண்ட காலமாக இருந்து வரும் பரமவைதிகர்கள் தாங்கள் இழந்த வாழ்வை மீண்டும் பெற்று, தங்களது தாழ்வு நீங்கப் பெற்றனர். இதன் மூலம் இந்தப் பூமியானது மிகவும் உயர்ந்த புண்ணியம் பெற்றது. எம்பெருமானாரின் ஸ்ரீபாஷ்யம் போன்ற நூல்கள் மூலமாக வேதங்களில் கூறப்பட்ட பரம்பொருள் குறித்த ஐயம் அனைத்தும் நீங்கிவிட்டன. தாழ்வான குணங்கள் கொண்டிருந்தவர்களின் பாவங்கள் அனைத்தும் நீங்கப் பெற்றன.

66. ஞானம் கனிந்த நலம் கொண்டு * நாள்தொறும் நைபவர்க்கு
      வானம் கொடுப்பது மாதவன் * வல்வினையேன் மனத்தில்
       ஈனம் கடிந்த இராமானுசன் தன்னை எய்தினர்க்கு அத்
      தானம் கொடுப்பது * தன் தகவு என்னும் சரண் கொடுத்தே.

விளக்கவுரை – “அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா”, என்று கூறும்படி, பெரியபிராட்டியுடன் இணைந்தே சேதனர்களைக் கைக்கொள்ளும் ஸர்வேச்வரன், தனது உயர்ந்த இடமாகிய பரமபதத்தை யாருக்கு அளிக்கிறான் என்றால் – சிறந்த ஞானம் கொண்டு பக்தி உடையவர்களாகவும், அந்தப் பக்தி காரணமாக நாள் முழுவதும் அவனை எண்ணியபடி கைங்கர்யம் செய்பவர்களுக்கே ஆகும். இப்படி உள்ளபோது உடையவர் செய்தது என்ன? மிகவும் தீய பாவங்கள் பலவும் செய்தபடி உள்ள எனது மனதில் இருந்த பாவங்கள் செய்யும் எண்ணங்களை அடியுடன் நீக்கினார். இதன் மூலம் பரமபதம் கிட்டும்படிச் செய்தார். இதுவே அவரது கருணை மூலமாக, அவர் நமக்குச் செய்யும் உபாயமாகும்.

32. இராமானுச நூற்றந்தாதி(பாசுரங்கள் 63-64) February 29, 2008

Posted by sridharan in இராமானுச100அந்தாதி.
add a comment
62. பிடியைத் தொடரும் களிறன்ன * யான் உன் பிறங்கிய சீர்
      அடியைத் தொடரும்படி நல்கவேண்டும் * அறுசமயச்
      செடியைத் தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்தோட வந்து இப்
      படியைத் தொடரும் * இராமானுச! மிக்க பண்டிதனே!

விளக்கவுரை – வேதங்களை மறுக்கும் ஆறு மதங்களைப் பின்பற்றுபவர்கள், அந்த முள் நிறைந்த செடிகளை அண்டி இருப்பவர்கள் கண்டவுடன் பயந்து ஓடும்படியா, இந்தப் பூமியில் பரமபதத்திலிருந்து வந்து திருஅவதாரம் செய்த எம்பெருமானாரே! (ஆறு என்ற பதம் மூலம் – ஆட்டின் தலையை வெட்டிப் பலி கொடுத்தல், முள் நிறைந்த காட்டில் பஞ்ச அக்னி எழுப்பி கோரமான தவம் புரிதல், பாஷாண்டி வேடம் பூண்டபடி இருத்தல் முதலானவற்றையும் கூறுவதாகக் கொள்ளலாம்). உடையவரே! உம்முடைய ஞானம் எத்தகையது! எனக்கு ஒரு விண்ணப்பம் உள்ளது. அது என்னவென்றால் – பெண் யானையைத் தொடரும் ஆண் யானையைப் போன்று, இத்தனை ஆண்டுகளாக நான் உலகவிஷயங்களின் பின் மட்டுமே சென்றபடி இருந்தேன். இவ்விதம் திரிந்த நான் இனி வரும் காலங்களில், இந்த உலகம் முழுவதும் நிரம்பிய புகழ் கொண்ட உன்னுடைய திருவடிகளை மட்டுமே, ஒருபோதும் நழுவாமல் அண்டி நிற்கவேண்டும். இப்படிப்பட்ட குணத்தை நீவிர் எனக்கு அருள வேண்டும்.

64. பண்தரு மாறன் பசுந்தமிழ் * ஆனந்தம் பாய்மதமாய்
      விண்டிட எங்கள் இராமானுசமுனி வேழம் * மெய்ம்மை
      கொண்ட நல்வேதக் கொழுந்தண்டம் ஏந்திக் குவலயத்தே
      மண்டி வந்து ஏன்றது வாதியர்காள் உங்கள் வாழ்வு அற்றதே.

விளக்கவுரை – தன்னை அண்டியவர்களைக் காப்பாற்றும் தன்மை உடையதும், தான் விரும்பியவர்களுக்கு மாலை சூடி அவர்களுக்கு பட்டாபிஷேகம் செய்விக்கும் திறனுள்ளதும் ஆகிய யானை போன்று எங்கள் எம்பெருமானார் உள்ளார். இத்தகைய யானையின் மதநீராக வழிவது எது என்றால் – நம்மாழ்வார் அருளிச்செய்த, அழகான பண்களுடன் கூடிய, தெளிவான தமிழில் உள்ள திருவாய்மொழி ஆகும். இத்தகைய திருவாய்மொழி என்னும் மதநீர் எங்கும் பரவி ஓடும்படி யானையாகிய எம்பெருமானார் வந்தார். இந்த யானையின் தந்தமாக எது உள்ளது என்றால் – (தந்தம் = உடையவர் திருக்கரத்தில் உள்ள த்ரிதண்டம் என்றும் கூறலாம்) ஸத்யமே வடிவமாக உள்ளதும், மிகுந்த பெருமை உள்ளதும் ஆகிய வேதங்கள் ஆகும். அல்லது நம்மாழ்வாரின் தமிழ் வேதமாகிய திருவாய்மொழியைக் கூறியதாகவும் கொள்ளலாம். அல்லது பசுந்தமிழ் ஆனந்தம் பாய்மதம் என்பதற்கு – ஸ்ரீமந் நாராயணன் என்னும் கடலில் இருந்து, ஆழ்வாராகிய மேகமானது கருணை என்னும் நீரை பருகி எடுத்தது; அதனை பெரியநம்பி என்னும் குன்றில் பெய்விக்க, அங்கிருந்து அந்தக் கருணையானது வழிந்து, மணக்கால்நம்பி – உய்யக்கொண்டார் – ஆளவந்தார் என்னும் ஆறுகளில் பாய்ந்து, எம்பெருமானார் என்னும் குளத்தை அடைந்து, ஸம்ஸாரிகளைக் காத்தது – என்று பொருள் கொள்ளலாம். இப்படிப்பட்ட த்ரிதண்டம் ஏந்திய இவர் செய்வது என்ன? யானையாக வந்து வேதங்களை மறுத்துக் கூறுபவர்களை மிதித்தும், தனது தந்தம் கொண்டு குத்தியும் ஓடச் செய்கிறார் என்று கருத்து. ஸர்வேச்வரன் எப்போதும் தனது திருக்கரங்களில் சங்கும் சக்கரமும் கொண்டது போன்று, எம்பெருமானார் எப்போதும் த்ரிதண்டத்துடன் உள்ளார். இப்படிப்பட்ட யானை இந்த பூமியில் உள்ள ஹிமாசலம், வேங்கடாசலம், சாரதாபீடம் ஆகிய இடங்களுக்கு வந்து, வாதம் செய்தவர்களைத் தள்ளியபடி நின்றது. எம்பெருமானாரின் வாதங்களை எதிர்த்து வாதம் செய்பவர்களே! உங்கள் வாழ்வு இத்துடன் முடிந்தது.

31. இராமானுச நூற்றந்தாதி(பாசுரங்கள் 61-62) February 28, 2008

Posted by sridharan in இராமானுச100அந்தாதி.
add a comment
61. கொழுந்து விட்டு ஓடிப் படரும் வெங்கோள் வினையால் * நிரயத்து
      அழுந்தி இட்டேனை வந்து ஆட்கொண்ட பின்னும் * அருமுனிவர்
      தொழும் தவத்தோன் எம் இராமானுசன் தொல்புகழ் சுடர்மிக்கு
       எழுந்தது * அத்தால் நல் அதிசயங்கண்டது இருநிலமே.

விளக்கவுரை – ஸ்ரீமத் பகவத் கீதையில் – ஸ மஹாத்மா ஸு துர்லப – இப்படிப்பட்ட ஞானி கிட்டுவது மிகவும் அபூர்வம் – என்றான். அதன் பின்னர் ஸ்வாமி நம்மாழ்வார் திருஅவதாரம் செய்தபோது, “இவரை நாம் காணமுடியாமல் போனதே”, என்று வாஸுதேவனே வருத்தம் கொண்டதாக ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை வ்யாக்யானம் அருளிச் செய்தார். இப்படிப்பட்ட உயர்ந்த நிலையை “அரு” என்னும் பதம் கூறியது. அடுத்துள்ள “முனிவர்” என்னும் பதம் ஸ்வாமி நம்மாழ்வாரைக் கூறியது. “வாஸுதேவஸ் ஸர்வம்”, “உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்”, என்று அனைத்தும் கண்ணனே என வாழ்ந்தவர் ஸ்வாமி நம்மாழ்வார் ஆவார். இப்படிப்பட்ட நம்மாழ்வாரால், “பொலிக பொலிக” என்று போற்றப்பட்டவரும், “ஆ முதல்வன்” என்று ஆளவந்தாரால் போற்றப்பட்டவரும் எம்பெருமானார் ஆவார். இப்படிப்பட்ட உயர்ந்தவர்கள் போற்றும்படியாக, ப்ரபத்தி என்னும் தவம் கொண்டவராக உள்ளவர் உடையவர் ஆவார். இந்த உலகில் எங்கும் பரவியுள்ளதும், எந்தவகையான ப்ராயச்சித்தம் கொண்டும் தொலைக்க முடியாததும் ஆகிய வினைப்பயன்களால் நான் ஸம்ஸாரம் என்னும் கடலில் சிக்கித் தரை காண இயலாமல் இருந்தேன். இப்படிப்பட்ட என் போன்றவர்களை, எங்கள் அறியாமை கண்டு கைவிடாமல், நாங்கள் உள்ள இடம் தேடி வந்து ஆட்கொண்டதால், எம்பெருமானாரின் திருக்கல்யாண குணங்கள் மேலும் ஓங்கி வளர்ந்தன. இவ்விதம் என் போன்ற பாவம் செய்த பலரைக் காப்பாற்றிய பின்னர், எம்பெருமானாரின் குணங்கள் மேலும் ஓங்கியதைக் கண்ட இந்த உலகம் வியந்து நின்றது. என் போன்ற வினை உள்ளவர்கள் இன்னமும் இந்த உலகில் அதிகம் பேர் இருக்கக்கூடும் என்ற எண்ணத்தில் ஓங்கி வளர்ந்தது எனலாம்.

62. இருந்தேன் இருவினைப் பாசம் கழற்றி * இன்று யான் இறையும்
வருந்தேன் இனி எம் இராமானுசன் * மன்னு மாமலர்த்தாள்
பொருந்தா நிலையுடைப் புன்மையினோர்க்கு ஒன்றும் நன்மை செய்யாப்
பெருந்தேவரைப் பரவும் * பெரியோர் தங்கழல் பிடித்தே.

விளக்கவுரை – நமது எஜமானராக உள்ள எம்பெருமானாரின் தாமரைமலர் போன்ற அழகான திருவடிகளை ஒரு சில துர்மனம் கொண்டவர்கள் வந்து அண்டாமல் இருக்கக்கூடும். இப்படிப்பட்ட மனிதர்களுக்கு ப்ரம்மன், சிவனை விடவும் உயர்ந்த நித்யஸூரிகள் எந்தவிதமான நன்மைகளையும் செய்வதில்லை (நித்யஸூரிகளே நன்மை செய்யவில்லை என்றால், பகவான் கண்டிப்பாக ஏதும் செய்யமாட்டான் என்று கருத்து). இப்படிப்பட்ட நித்யஸூரிகளின் திருவடிகளையே எப்போதும் போற்றியபடி உள்ளவர்கள் கூரத்தாழ்வான் போன்ற உயர்ந்தவர்கள் ஆவர் (இங்கு பெருந்தேவர் என்ற பதம் பெரியபெருமாளையும்; பரவும் பெரியோர் என்ற பதம் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் போன்றவர்களையும் கூறுவதாகவும் கொள்ளலாம்). இப்படிப்பட்ட பெரியவர்களின் திருவடிகளை நான் அண்டி நின்ற பின்னர், பாசம் என்னும் விலங்கை கழற்றி விட்டேன். இனி நான் ஒரு நொடிப் பொழுதும் ஸம்ஸார துக்கம் மூலம் வருந்தமாட்டேன்.

30. இராமானுச நூற்றந்தாதி(பாசுரங்கள் 59-60) February 27, 2008

Posted by sridharan in இராமானுச100அந்தாதி.
add a comment
59. கடல்  அளவாய  திசை  எட்டின்  உள்ளும் * கலி  இருளே
       மிடை  தரு  காலந்து  இராமானுசன் * மிக்க  நான்மறையின்
       சுடர்  ஒளியால்  அவ்விருளைத்  துரந்திலனேல்  உயிரை 
       உடையவன் * நாரணன்  என்று  அறிவாரில்லை  உணர்ந்தே.

விளக்கவுரை – கடல் சூழ்ந்த எட்டுத் திசைகளும் கொண்ட இந்தப் பூமி முழுவதும், கலி புருஷன் தனது ஸ்வபாவம் மூலம் உலகில் உள்ள அனைவருக்கும் அஜ்ஞானம் என்ற இருளை உண்டாக்கினான். இதனால் தர்ம மார்க்கத்தை யாரும் எளிதில் காணாதபடி செய்தான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பரமபதத்தில் இருந்து இந்த உலகில் எம்பெருமானார் திருஅவதாரம் செய்தார். ஸர்வேச்வரனின் ஸ்வரூபம் மற்றும் ரூபங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய நான்கு வேதங்கள் என்ற கொழுந்து விட்டு எரியும் ஒளி கொண்டு, கலிபுருஷனால் உண்டாக்கப்பட்ட அஜ்ஞானம் என்னும் இருளை நீக்கினார். இவ்விதமாக எம்பெருமானார் செய்யவில்லை என்றால் என்ன நிகழ்ந்திருக்கும்? இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் எஜமானனாக நாராயணனே உள்ளான் என்று மிகவும் தெளிவாக ஆராய்ந்து அறிபவர்கள் யாரும் இல்லை என்ற அவலநிலை உண்டாகியிருக்கும்.

60. உணர்ந்த  மெய்ஞ்ஞாநியர்  யோகந்தொறும் * திருவாய்மொழியின்
       மணம்  தரும்  இன்னிசை  மன்னும்  இடந்தொறும் * மாமலராள்
       புணர்ந்த  பொன்மார்வன்  பொருந்தும்  பதிதொறும்  புக்கு  நிற்கும்
       குணம்  திகழ்  கொண்டல் * இராமானுசன்  எங்குலக்  கொழுந்தே. 

விளக்கவுரை – இங்கு உணர்வு என்பது பக்தியைக் குறிக்கும். பக்தி என்பது ஸ்ரீமந் நாராயணனே அனைத்திற்கும் எஜமானன் என்று அறிந்து, அவன் அனைத்து திருக்கல்யாண குணங்களும் கொண்டவன் என்று உணர்ந்து, அவன் ஆனந்தமயமாக உள்ளவன் என்று தெளிந்து அவனைப் போற்றும் தன்மையாகும். இப்படிப்பட்ட தன்மையில் தங்களை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டவர்கள் ஆழ்வார்கள் ஆவர். ஆக – உணர்ந்த மெய்ஜ்ஞானியர் – என்பது ஆழ்வார்களைக் குறிக்கும். இப்படிப்பட்ட ஆழ்வார்கள் கூட்டத்தில் எப்போதும் உள்ளவர்; ஆழ்வார்களில் ப்ரதானமாக உள்ள நம்மாழ்வார் அருளிச் செய்த தமிழ் வேதமாகிய திருவாய்மொழியானது, தனது இசை என்னும் நறுமணத்தை எங்கெல்லாம் பரப்பியபடி உள்ளதோ, அங்கெல்லாம் உள்ளவர்; தாமரை மலரில் அமர்ந்த மஹாலக்ஷ்மி மிகவும் விரும்பி ஆரத்தழுவுகின்ற திருமார்பைக் கொண்டவனாகிய ஸ்ரீமந் நாராயணன் மிகவும் உகந்து எழுந்தருளியுள்ள திவ்யதேசங்களில் பொதிந்து நிற்பவர் – இவற்றுள் தானாகவே கானகத்தில் வந்து வழிகாட்டி சேர்த்துவிட்ட காஞ்சீபுரம், பெரியபெருமாளின் ஆணையின் பேரில் வந்து அருளிய திருவரங்கம், சைவர்களின் பிடியில் இருந்து காப்பாற்றிய திருமலை, வேதங்களை ஏற்காத மதங்களை வாதம் செய்து வீழ்த்திய திருநாராயணபுரம், நம்மாழ்வார் அவதரித்த ஆழ்வார்திருநகரி, ஆண்டாளின் விருப்பத்தை நிறைவேற்றிய திருமாலிருஞ்சோலை – ஆகியவை முக்கியமானவை – இப்படியாக பல இடங்களிலும் மிகவும் ப்ரியம் கொண்டு ஈடுபட்டு எம்பெருமானார் காணப்படுவார். இவ்விதம் பக்தி என்ற குணமே இவரிடம் சென்று மேலும் மேன்மை பெற்றது என்னும்படியாக உள்ள எம்பெருமானார், எங்களது வைணவ குலம் தழைக்க வந்த கொழுந்து ஆவார். வேருக்கு அதிக வெப்பம் ஏற்பட்டால் அதனை உணர்ந்த கொழுந்துப்பகுதி வாடுவது போன்று, எங்கள் வைணவ குலத்திற்கு ஏதேனும் நேர்ந்தால், தனது முகம் வாடும் தன்மை கொண்டவர் என்று கருத்து.

29. இராமானுச நூற்றந்தாதி(பாசுரங்கள் 57-58) February 26, 2008

Posted by sridharan in இராமானுச100அந்தாதி.
add a comment
57. மற்றொரு பேருமதியாது * அரங்கன் மலரடிக்கு ஆள்
      உற்றவரே தனக்கு உற்றவராக் கொள்ளும் உத்தமனை *
      நல்தவர் போற்றும் இராமானுசனை இந்நானிலத்தே
      பெற்றனன் * பெற்றபின் மற்றறியேன் ஒரு பேதைமையே

விளக்கவுரை – வேறு எந்தவிதமான தேவதைகளையும் அணுகாமல், அவை மூலம் பெறும் பயன்கள் எதனையும் விரும்பாமல், திருவரங்கத்தை தான் வாசம் செய்யும் இருப்பிடமாகக் கொண்ட பெரியபெருமாளின் திருவடிகளை மட்டுமே சிலர் அண்டியபடி உள்ளனர். இப்படிப்பட்டவர்களை தனது அனைத்து விதமான உறவினர்கள் என்று கொள்ளும் உத்தமராக எம்பெருமானார் உள்ளார். இப்படிப்பட்ட எம்பெருமானாரை அறிவில் சிறந்தவர்கள் – ஸ்ரீமாந் அவிரபூத் பூமௌ ராமானுஜ திவாகர:, ராமானுஜபத அம்போஜ ஸமாச்ரயண சாலிந:, ஸத்யம் ஸத்யம் புந: ஸத்யம் யதிராஜோ ஜகத்குரு, ஜயதி லக்ஷ்மணோயம் முனி: வாழி யதிராசன் வாழி யதிராசன் – என்று பலவாறு போற்றியபடி உள்ளனர். இந்த எம்பெருமானாரை, இருள் தரு மா ஞாலம் என்றுள்ள இந்த உலகத்தின் நான் அண்டினேன். இவ்விதமாக அவரை அடைந்த பின்னர், எனது அறியாமை அனைத்தும் எங்கு சென்றது என்பதை நான் அறியவில்லை.

58. பேதையர் வேதப்பொருள் இதென்று உன்னி * பிரமம் நன்றென்று
       ஓதி மற்றெல்லா உயிரும் அஃது என்று * உயிர்கள் மெய்விட்டு
      ஆதிப்பரனோடு ஒன்றாம் என்று சொல்லும் அவ்வல்லல் எல்லாம்
      வாதில் வென்றான் * எம் இராமானுசன் மெய்ம்மதிக் கடலே.

விளக்கவுரை – வேதங்களைப் ப்ரமாணம் என்று ஒப்புக்கொளாத மதம் அன்றி, வேதங்களே ப்ரமாணம் என்று ஏற்றுக்கொள்ளும் தன்மையில் உள்ளபோதும் – யாதவப்ரகாசர் முதலானோர் வேதங்களுக்குத் தவறான பொருள்களைக் கூறியபடி உள்ளனர். இவர்கள் தாங்கள் கூறுவதே வேதங்களின் உண்மையான பொருள் என்று வாதாடியபடி உள்ளனர். ப்ரஹ்மம் மட்டுமே உண்மை என்று கூறி, மற்ற அனைத்து ஆத்மாக்களும் ப்ரஹ்மமே என்று வாதாடுகின்றனர். அனைத்து ஆத்மாக்களும் ப்ரஹ்மமும் ஒன்றே என்பது போன்ற தவறான கருத்துக்களைப் பரப்பியபடியும் வந்தனர். இப்படிப்பட்ட இவர்களின் ஆரவாரம் நிறைந்த வாதங்கள் அனைத்தையும், இந்த உலகைக் காப்பாற்றும் விதமாக, தனது வாதம் மூலம் எம்பெருமானார் வென்றார். இவ்விதமாக இவர்களை வென்ற நமது எம்பெருமானார், உண்மையான ஞானம் நிரம்பிய கடலாகவே உள்ளார்.

28. இராமானுச நூற்றந்தாதி(பாசுரங்கள் 55-56) February 25, 2008

Posted by sridharan in இராமானுச100அந்தாதி.
add a comment
55. கண்டவர் சிந்தை கவரும் * கடிபொழில் தென்னரங்கன்
      தொண்டர் குலாவும் இராமானுசனை * தொகையிறந்த
       பண்தரு வேதங்கள் பார் மேல் நிலவிடப் பார்த்தருளும்
      கொண்டலை மேவித் தொழும் * குடியாம் எங்கள் கோக்குலமே.

விளக்கவுரை – எண்ணற்ற வேதங்களை, அனைத்து ஞானமும் அளிக்கவல்ல வேதங்களை, எண்ணற்ற காலம் இருந்துவரும் வேதங்களை இந்த அகண்ட பூமியில் உள்ள ஜைனர்கள், பௌத்தர்கள் போன்றோர் மறுத்தனர். இவர்களைப் போன்றோரை வாதத்தின் மூலம் வீழ்த்தி, வேதங்கள் எங்கும் பரவும்படிச் செய்தார். இப்படிப்பட்ட வேதங்கள் என்னும் மழையைப் பெய்விக்கும் மேகமாக எம்பெருமானார் உள்ளார். திருவரங்கத்தில் உள்ள அழகியமணவாளன், யார் தன்னைக் காண்கிறார்களோ அவர்களின் மனதை அப்போதே பறித்துக் கொள்பவனாக, “மீண்டும் இவனை நாம் எப்போது காண்போம்?”, என்று துடிக்கும்படிச் செய்பவனாக உள்ளான். இப்படிப்பட்ட அரங்கனின் திருவடிகளையே எப்போதும் பற்றியுள்ள அரங்கனின் தொண்டர்கள், அவனை விடுத்து இப்போது எம்பெருமானாரின் திருக்கல்யாண குணங்களை உணர்ந்தவர்களாக, இவரையே சூழ்ந்தபடி உள்ளனர். இப்படிப்பட்ட எம்பெருமானாரின் திருவடிகளைப் பற்றியபடி உள்ளவர்கள், எந்தக் குலத்தில் பிறந்துள்ளபோதும், அவர்களது குலமே எங்கள் குலம் என்று கூறும்படியாக நாங்கள் உள்ளோம்.

56. கோக்குல மன்னரை மூவெழுகால் * ஒரு கூர்மழுவால்
      போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் * புவனம் எங்கும்
      ஆக்கிய கீர்த்தி இராமானுசனை அடைந்தபின் என்
      வாக்கு உரையாது * என் மனம் நினையாது இனி மற்றொன்றையே.

விளக்கவுரை – முன்பு ஒரு காலகட்டத்தில், மிகுந்த செல்வம் உள்ளதால் அரசன் என்று இல்லாமல், இயல்பிலேயே க்ஷத்ரியர்களாக உள்ளதால் அரசர்கள் என்று கூறிக் கொள்பவர்களை இருபத்து ஒரு தலைமுறை, தனது கோடாரி கொண்டு வதைத்த பரசுராமனை எம்பெருமானார் போற்றி நின்றார். இப்படிப்பட்ட தூய்மையான எம்பெருமானாரின் புகழ் இந்த உலகம் முழுவதும் பரவி நிற்கிறது. இத்தகைய எம்பெருமானாரை அண்டிய பின்னர், இனி வரும் காலங்களில், எனது மனம் வேறு எதனையும் நாடாது; எனது வாக்கு அவரது புகழ் அல்லாமல் எதனையும் கூறாது.